தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் என இரு துருவங்கள் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இன்னும் முன்னணி இடத்தில் நின்று கோலோச்சி வருகின்றனர். அதற்கு காரணம் ஒரு பக்கம் அவர்களது அயராத உழைப்பு என்றாலும் ரஜினி இந்த அளவிற்கு இன்னும் முதல் இடத்திலேயே இருப்பதற்கு காரணம் நன்றி மறக்காதது தான்.
அந்த வகையில் தன்னை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் யாரெல்லாம் எதிர்பாராத விதமாக சரிவை சந்திக்கிறார்களோ அந்த சமயத்தில் தானாகவே சென்று அவர்களை சந்தித்து அவர்களுக்கு படம் இயக்கும் அல்லது தயாரிக்கும் வாய்ப்பை கொடுத்து அவர்களை கை தூக்கி விடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார் ரஜினிகாந்த்.
அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயனும் அதேபோன்ற ஒரு பாலிசியை கையில் எடுத்துள்ளார். இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயனை வைத்து அயலான் என்கிற படத்தை இயக்கிய ரவிக்குமார் அந்த படத்தின் தாமதத்தால் நிறைய படங்களை இயக்கும் வாய்ப்பை இழந்துவிட்டார்.
அதேபோல சிவகார்த்திகேயனை வைத்து டான் என்கிற வெற்றிப் படத்தை கொடுத்த இயக்குனர் சிபி சக்கரவர்த்தியும் அடுத்த பட வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறுகிறார்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நன்றி மறக்காமல் இந்த இருவருக்கும் தனது அடுத்த அடுத்த படங்களை இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளாராம். இதே போல தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் பாண்டிராஜுக்கும் மீண்டும் ஒருமுறை சிவகார்த்திகேயன் கை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
இந்த முறையை சிவகார்த்திகேயன் பின்பற்றினால் நிச்சயம் அடுத்த விஜய் என்ன, அடுத்த ரஜினி இடத்திற்கே வந்து விடுவார் என உறுதியாக சொல்லலாம்.