பொதுவாகவே சினிமா நடிகர்கள் அதிலும் முன்னணி ஹீரோக்கள் அரசியலுக்கு வருவதாக சொல்லும் போதெல்லாம் மிகப்பெரிய அளவில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்கள். அந்த வகையில் இதற்கு முன் கட்சியை ஆரம்பித்த கார்த்திக், சரத்குமார், கமல் ஆகியோரும், கட்சி ஆரம்பிப்பதாக சொல்லி பின்னர் அதிலிருந்து பின் வாங்கிய ரஜினியும் மிகப்பெரிய விமர்சனங்களுக்கு ஆளானார்கள்.
தற்போது நடிகர் விஜய்யும் அரசியல் கட்சியை துவங்கியுள்ளார். இன்னும் இரண்டு வருடங்களில் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூறியுள்ளார். இதற்கும் வழக்கம் போல பலரிடம் இருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதிலும் ஆச்சரியமாக திரையுலகில் உள்ள அவருடன் இணைந்து நடித்த நடிகர் மன்சூர் அலிகான் கூட, விஜய்யின் அரசியல் வருகையை விமர்சித்துள்ளார். மன்சூர் அலிகானும் ஏற்கனவே இந்திய ஜனநாயக மக்கள் கட்சி என்கிற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து சமீபத்தில் நடைபெற்ற தனது கட்சி கூட்டத்தில் அவர் பேசும்போது, சினிமாவில் வாய்வலிக்க முத்தம் கொடுத்துவிட்டு நடிகைகளுடன் முட்டி தேய நடனம் ஆகிவிட்டு ரிட்டையர்டு வயது வரும்போது அரசியலுக்கு வரும் நடிகர்கள் நேராக முதலமைச்சராகி விடுவோம் என்று கனவு காண்கிறார்கள்.
அப்படி என்றால் வில்லன் நடிகர்களான எங்களின் நிலைமை என்னாவது ? எங்களையும் முதலமைச்சர் ஆக்குங்கள்.. நாங்களும் சினிமாக்காரர்கள் தான் என்று பேசியுள்ளார்.
சமீபத்தில் லியோ படத்தில் விஜய் முத்தக்காட்சியில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் விஜய் குறித்து தான் அவர் பேசி உள்ளார் என்பதால் விஜய் ரசிகர்கள் மன்சூர் அலிகான் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர்.