பிரிக்க முடியாதது சிவகுமாரும் சர்ச்சையும் என்று சொல்லும் அளவுக்கு அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார் நடிகர் சிவகுமார். 82 வயதான அவர் நடிப்பை விட்டு ஒதுங்கி பல வருடங்கள் ஆனாலும் கூட இப்போதும் சூர்யா, கார்த்தி ஆகியோரின் தந்தை என்பதால் அவரைப் பார்க்கும் இடங்களில் அவருடன் போட்டோ எடுக்க, செல்பி எடுக்க இளம் ரசிகர்கள் கூட விருப்பப்படுகின்றனர்.
ஆனால் அப்படி ஒரு சில இடங்களில் செல்பி எடுக்க முயன்ற இளைஞர்களின் செல்போனை தட்டி விட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார் சிவகுமார். அதன் பிறகு தனது செயலுக்காக வருத்தமும் தெரிவித்தார். இரண்டு வருடங்கள் அமைதியாக இருந்த நிலையில் சமீபத்தில் காரைக்குடியில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்போது தனக்கு சால்வை அணிவிக்க வந்த ஒருவரிடம் இருந்து அந்த சால்வையை பிடுங்கி கீழே எறிந்தார்.
அப்போதும் கூட அந்த நபர் சிரித்தபடி நின்று இருந்தார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாக பரவியது. மீண்டும் சிவக்குமார் இது போன்று அநாகரிகமாக நடந்து கொள்கிறாரே என்று பலரும் அவரை விமர்சிக்க ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் இதில் ஒரு புதிய திருப்பமாக, நடிகர் சிவகுமார் இந்த நிகழ்வு குறித்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சால்வை போர்த்த வந்த அந்த நபரும் சிவகுமாருடன் அமர்ந்துள்ளார்.
அந்த நிகழ்வு பற்றி சிவகுமார் கூறும்போது, “இந்த நபர் வேறு யாருமில்லை.. என்னுடைய நண்பரை போன்ற தம்பிதான்.. 50 வருடமாக எங்களுக்குள் பழக்கம். இவருக்கு திருமணம் செய்து வைத்ததே நான் தான்.. இவரது மகள், பேத்தி அனைவரின் திருமணத்திற்கும் நான் சென்று வந்திருக்கிறேன்.. எனக்கு பொதுவாகவே நிகழ்ச்சிகளில் சால்வை போர்த்துவது பிடிக்காது. அதை தெரிந்து கொண்டும் என்னை பார்க்க வந்த இவர் சால்வையோடு வந்ததால் நான் கோபம் அடைந்து அதை பிடுங்கி வீசிவிட்டேன்.. அவர் அப்படி சால்வையோடு வந்ததும் தப்பு.. நான் அதை பொதுவெளியில் பிடுங்கி வீசியதும் தப்பு” என்று கூறியுள்ளார்.