இயக்குனர் பாலாவை பொறுத்தவரை அவர் எந்த ஒரு படத்தின் அல்லது எந்த ஒரு நாவலின் கதையையோ காப்பி அடித்து படம் பண்ணிவிட்டார் என்று குற்றச்சாட்டு வந்ததே இல்லை. காரணம் அவரது படங்கள் இதுவரை வெளியானவர்களின் படங்களிலிருந்து எப்போதுமே வித்தியாசமான கதைக்களங்களாக தான் இருந்து வருகிறது.
அந்த வகையில் தான் தற்போது அருண் விஜய் நடிப்பில் வணங்கான் படத்தை இயக்கி வருகிறார் பாலா. படத்தில் பரபரப்பாக நிறைய விஷயங்கள் இருப்பது டீசரை பார்க்கும்போதே தெரிகிறது. அதே சமயம் இப்போது படத்திற்கு அவர் வைத்துள்ள வணங்கான் டைட்டிலுக்கு பிரச்சனை வரும் என்பது போல தகவல் வெளியாகி உள்ளது.
காரணம் ஏற்கனவே சரவணன் என்கிற ஒரு இயக்குனர் இதேபோல வணங்கான் என்கிற பெயரில் ஒரு டைட்டிலை தயாரிப்பாளர் சங்கத்தில் (கில்டு) பதிவு பண்ணி வைத்திருக்கிறாராம். ஆனால் இயக்குனர் பாலாவோ முக்கியமான தயாரிப்பாளர் சங்கத்தில் இந்த டைட்டிலை பதிவு செய்துள்ளார்.
அந்த இயக்குனர், தான் இயக்க உள்ள படத்திற்கு ஒரு ட்ரெய்லரை கட் பண்ணி வணங்கான் என்கிற பெயரிலேயே சென்சார் சான்றிதழும் வாங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. நாளை பாலா தனது வணங்கான் படத்திற்காக சென்சார் அலுவலகம் சென்றால் ஏற்கனவே இப்படி ஒரு பெயரில் ஒரு படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது என்று சிக்கல் வர வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் வெறும் வணங்கான் என்று இல்லாமல் பாலாவின் வணங்கான் என சேர்த்து டைட்டிலை மாற்றுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.