பெரும்பாலும் சினிமாக்களில் போலீஸ் ஸ்டேஷன் சம்பந்தப்பட்ட காட்சிகள் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக அதில் போலீஸ் அதிகாரியாக நடிப்பவர்கள் விரைப்பும் முறைப்புமாக நடிப்பார்கள். அந்த காட்சிகளில் குற்றவாளிகளாக, கைதிகளாக, நடிப்பவர்களை நிஜமாகவே அடிப்பது போன்று நடித்தே ஆக வேண்டும். சில இயக்குனர்கள் நடிக்க வேண்டாம், நிஜமாகவே அடியுங்கள்.. அப்படி என்றால் தான் காட்சி ஒரிஜினலாக இருக்கும் என்று கூறுவார்கள்.
விசாரணை படத்தில் இது போன்ற காட்சிகளை பார்த்து நாம் மிரண்டு உள்ளோம். அந்த வகையில் சமீபத்தில் மலையாளத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற படம் வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றுள்ளது. பெயர் தான் மலையாள படம் என்றாலும். கொடைக்கானலில் உள்ள குணா குகையை மையப்படுத்தி இந்த படம் பாஹி தமிழில் எடுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான தமிழ் நடிகர்களும் இதில் நடித்துள்ளனர். தமிழில் சின்ன சின்ன வில்லன் வேடங்களில் நடித்து வந்த விஜயமுத்து என்பவர் இந்த படத்தில் கரடு முரடான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
கதைப்படி கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பத்து நண்பர்களில் ஒருவர் தவறுதலாக குணா குகைக்குள் விழுந்து விடுகிறார். அவரை காப்பாற்றுவதற்கு நண்பர்கள் போராடுகிறார்கள். அதில் சிலர் கொடைக்கானல் போலீஸ் ஸ்டேஷன் சென்று இந்த விவரத்தைக் கூறி அவரை காப்பாற்றுமாறு கெஞ்சுகிறார்கள். அதற்கு இந்த விஜயமுத்து நீங்களே உங்களது நண்பனை தள்ளிவிட்டு பொய் சொல்கிறீர்களா என்று கோபத்தில் அவர்களை அடிக்க துவங்குகிறார்.
இந்த காட்சியில் மூன்று, நான்கு நண்பர்கள் அடி வாங்குவார்கள். அதில் கார் ஓட்டுநராக நடித்திருக்கும் நண்பரும் சரியாக அடி வாங்குவார். ஆனால் அவர் நிஜத்தில் தள்ளுமால என்கிற ஒரு ஹிட் படத்தின் இயக்குனர். இந்த படத்தில் நட்புக்காக நடித்துள்ளார். இந்த காட்சியை படமாக்கியபோது தவறுதலாக இவருக்கும் சில அடி விழுந்தது.
அடி தாங்க முடியாமல் விஜயமுத்துவிடம் சேட்டா நான் நடிகரல்ல.. ஒரு இயக்குனர்.. நான் படம் இயக்கி இருக்கிறேன் என்று கூறி கெஞ்சி இருக்கிறார். அதன் பிறகு தனது மொபைலில் தான் எடுத்த படத்தின் காட்சிகளை போட்டுக் காட்டினாராம். அதை பார்த்து விஜயமுத்து ஷாக் ஆனாராம்.
சமீபத்தில் அந்த இயக்குனர் கூறும்போது, “நான் படம் முழுக்க சண்டை காட்சிகளை வைத்து ‘தள்ளுமால’ என்கிற படம் இயக்கினேன். ஆனால் யாருக்கும் எந்த அடியும் படவில்லை. ஆனால் என்னைப்போட்டு பொளந்து விட்டார்கள்” இன்று காமெடியாக கூறியுள்ளார்.