அரிமாபட்டி எனும் சிறிய கிராமம் ஒன்று தமிழகத்தின் முக்கிய மாநகரமான திருச்சிக்கு அருகே அமைந்திருக்கிறது. சில நூறு குடும்பங்கள் வாழும் இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் சாதி மறுப்பு திருமணத்தையோ… கலப்பு திருமணத்தையோ ஆதரிப்பதில்லை. அதையும் மீறி திருமணம் செய்து கொள்பவர்களை.. தங்கள் கிராமத்திற்குள் அனுமதிப்பதில்லை.
திருமணம் செய்து கொண்ட தம்பதிகளின் பெற்றோர்கள், அந்த தம்பதியினருடன் எந்த உறவும் நட்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது இந்த கிராமத்து மக்கள் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் கட்டுப்பாடு. இந்தக் கட்டுப்பாட்டை இந்த ஊரில் வசிக்கும் குழந்தைவேலின் ( சார்லி) மூத்த மகன் சக்திவேல் ( பவன்) மீறுகிறார்.
இவர் எட்டு ஆண்டுகளாக காதலித்த கவிதா ( மேக்னா எலன்) என்ற பெண்ணை நண்பர்களின் துணையுடன் பதிவு திருமணம் செய்து கொள்கிறார். இவ்விடயம் பெண்ணின் சகோதரரான சுரேஷுக்கு ( பிர்லா போஸ்) தெரிய வருகிறது. அவர் எங்கள் வீட்டு பெண்ணை சக்திவேல் கடத்தி விட்டதாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்.
காவல்துறையினர் சக்திவேலின் குடும்ப உறுப்பினர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரிக்கிறார்கள். இதன்போது சக்திவேல் மற்றும் கவிதா… தாங்கள் திருமண வயதை எட்டியவர்கள் என்றும், பதிவு திருமணம் செய்து கொண்டவர்கள் என்றும் விளக்கமளிக்கிறார்கள்.
இதனால் பெண்ணின் சகோதரர் ஆத்திரமடைந்து சக்தி வேலை கொலை செய்ய திட்டமிடுகிறார். அதே தருணத்தில் அரிமாபட்டி பஞ்சாயத்து, சக்திவேலுடன் அவரது பெற்றோர்கள் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும், அவர் மீண்டும் ஊருக்குள் வரக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கிறார்கள். இந்நிலையில் சக்திவேலின் தாத்தா மரணமடைகிறார்.
சக்திவேல் தனது தாத்தாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த கிராமத்திற்கு வந்தாரா? ஊர் பஞ்சாயத்தின் முடிவுப்படி சக்திவேலின் தந்தை நடந்து கொண்டாரா? என்பதுதான் இப்படத்தின் திரைக்கதை.
படத்தின் கதை,திரைக்கதையை எழுதி நாயகனாகவும் நடித்திருக்கிறார் பவன்.படத்தைத் தயாரித்திருக்கும் இருவரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் இவருக்கு, மேல்நிலைப்பள்ளி மாணவர், திரைப்பட உதவி இயக்குநர் ஆகிய இரு வகைத் தோற்றங்கள்.தோற்றங்களில் மட்டுமின்றி நடிப்பிலும் மாறுபாடு காட்ட முயன்றிருக்கிறார்.இன்னும் கொஞ்சம் தேர்ச்சி வேண்டும்.
நாயகியாக மேக்னாஎலன். கிராமத்து அழகு என்பதற்கேற்ப செழிப்பாக இருக்கிறார். நடிப்பிலும் குறையில்லை.காதல் உணர்வுகள், பய உணர்ச்சி ஆகியனவற்றைச் சரியாக வெளிப்படுத்துகிறார்.
நாயகனின் அப்பாவாக சார்லி நடித்திருக்கிறார்.திருமணத்துக்குப் பின் மகன் மாறிவிட்டான் என்று வருந்தித் துன்புறும் வேடம்.வழக்கம்போல் சற்றுமிகை நடிப்பென்றாலும் நெகிழவைக்கிறார்.
நாயகியின் அண்ணனாகவும் கதையில் வில்லனாகவும் நடித்திருக்கும் பிர்லா போஸ் வேடத்துக்கேற்ப விறைப்பாக இருக்கிறார்.
நாயகனின் தாத்தாவாக வரும் அழகு, அரசியல்வாதியாக வரும் இமான் அண்ணாச்சி, சூப்பர்குட் சுப்பிரமணி,சேதுபதி ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் தம் நடிப்பின் மூலம் திரைக்கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
மணி அமுதவனின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசை அளவு.
ஜெபி மேனின் ஒளிப்பதிவு, கதைக்களத்தையும் கதை மாந்தர்களையும் உள்ளது உள்ளபடி காட்சிப்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே தமிழ்சினிமாவில் பலமுறை அடித்துத் துவைத்துப் போட்ட கதை தான். காட்சிகளிலும் பெரிதாக புதுமை இல்லை. ஆனாலும் சாதியவெறியின் தாண்டவம் இன்னும் கிராமங்களில் அப்படியே தான் இருக்கிறது. அந்த நிஜத்தைச் சொன்னதிற்காக அரிமாபட்டி சக்திவேலைப் பாராட்டலாம்.