spot_img
HomeNewsநல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே – விமர்சனம்

நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே – விமர்சனம்

நவீன வசதிகள், தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றினால் இளந்தலைமுறையின் சிறு பகுதியினர் என்னவெல்லாம் செய்கின்றனர்? என்பதை எடுத்துச் சொல்லும் படங்களின் வரிசையில் வந்து சேர்ந்திருக்கிறது நல்லபேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே.

படத்தின் நாயகன் செந்தூர்பாண்டியனுக்கு முகநூலில் மேய்ந்து அங்கு சிக்கும் இளம்பெண்களோடு நேரம் செலவழிப்பது எவ்வளவு தூரம் செல்லமுடியுமோ அவ்வளவு தூரம் செல்வது என இருக்கிறார்.ஒருமுறை முகநூல் நட்பான நாயகி ப்ரீத்திகரணை சந்திக்கத் திட்டம்.அந்தச் சந்திப்பினால் சில மாற்றங்கள்.அவை என்ன? அவற்றின் முடிவென்ன? என்று சொல்லியிருக்கிறது படம்.

நாயகனாக நடித்திருக்கும் செந்தூர்பாண்டியன் புதுமுகம் என்றாலும் வேடத்துக்கு ஏற்ப இருக்கிறார்.நாயகன் என்றால் நல்லவன் நல்லதையே சிந்திப்பவன் என்பதற்கு எதிரான வேடம்.இவர் புதுமுகம் என்பதால் பொருத்தமாகத் தெரிகிறார்.

நாயகி ப்ரீத்திகரண், திரைப்பட நாயகி போல் இல்லாமல் மிக எளிமையானவராக அதேசமயம் வலிமையானவராகவும் இருக்கிறார். பெண்களை ஆபாச எண்ணத்துடன் அணுகும் ஆண்கள் முகத்திலறைகிறாற் போல் கேள்வி கேட்கிறார்.

நாயகனின் நண்பராக வரும் சுரேஷ்மதியழகன், நாயகியின் நண்பராக நடித்திருக்கும் பூர்ணிமா, தங்கையாக நடித்திருக்கும் தமிழ்ச்செல்வி ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.

பயணவடிவில் திரைக்கதை அமைந்திருப்பது ஒளிப்பதிவாளர் உதய்தங்கவேலுவுக்கு வசதி.அதேநேரம் எவ்விடத்திலும் படாடோபம் காட்டாமல் இருக்கிறார்.

பிரதீப்குமாரின் இசையில் பாடல்கள் கவனிக்க வைக்கின்றன. பின்னணி இசையில் இயக்குநருக்கு உதவியிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கிறார் பிரசாந்த்ராமர்.சென்னை போன்ற மாநகரங்களில் மட்டும் நடப்பதாகச் சொல்லப்படும் செயல்கள் சின்னச் சின்ன ஊர்கள் வரை சென்று சேர்ந்திருக்கிறது என்பதையும் எங்கு நடந்தாலும் இப்படி நடப்பது சரியன்று என்று சொல்லியிருப்பதும் வரவேற்புக்குரியது.

இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று இளைய தலைமுறையினருக்குச் சொல்வதற்காகப் படமெடுத்திருக்கிறார்.அதற்காக அவர் வைத்திருக்கும் சில காட்சிகள், இப்படியெல்லாம் வைக்கக்கூடாது என்று அவருக்கு அறிவுரை சொல்லும் விதமாக அமைந்துவிட்டது சோகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img