விஜய்க்கு அவர் அறிமுகமான சமயத்தில் முதல் படம் சரியாக போகாத நிலையில் அவரது தந்தை எஸ் ஏ சி, கேப்டன் விஜயகாந்த்திடம் சென்று தன் மகனுக்காக அவருடன் இணைந்து ஒரு படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும். அப்படி நீங்கள் நடிக்கும்போது தான் என் மகனின் முகமும் பட்டி தொட்டி எல்லாம் ரசிகர்களிடம் அறிமுகமாகும் என்று கேட்டுக் கொண்டார்.
தன்னை சினிமாவில் வளர்த்து ஆளாக்கிய இயக்குனர் என்பதால் அதற்கு விஜயகாந்த் ஒப்புக்கொண்டார். உண்மையிலேயே அந்த படத்தில் நடித்ததன் மூலமாக விஜய் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் பிரபலமானார். அதேபோல கிட்டத்தட்ட சூர்யா அறிமுகமான சமயத்தில் அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை.
அந்த சமயத்தில் இதே போல எஸ் ஏ சி டைரக்ஷனில் விஜயகாந்த் நடித்த பெரியண்ணா படத்தில் அவருடன் இணைந்து நடித்தார் சூர்யா. அதன்பிறகு தான் அவருக்கு இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் ரசிகர்களிடம் அறிமுகம் கிடைத்தது. இந்த நிலையில் அந்த படம் வெளியாகி பல வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சுப்பையா என்பவர் பெரியண்ணா படத்தில் சூர்யா நடித்த காட்சிகளை இயக்குனர் எஸ்ஏசி இயக்கவே இல்லை என்று ஒரு தகவலை கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.
விஜயகாந்த் நடித்த காட்சிகளை மட்டுமே எஸ்ஏசி இயக்கினார் என்றும் சூர்யா நடித்த காட்சிகளை எஸ்ஏசி-யின் உதவியாளர்கள் தான் இயக்கினார்கள் என்றும் கூறியுள்ளார். காரணம் அந்த படம் பூஜை போடப்பட்டு படப்பிடிப்புக்கு செல்லும் சில நாட்களுக்கு முன்பு விஜய்யின் அம்மா ஷோபா தயாரிப்பாளரிடம் தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாததால் வேறு இயக்குனரை வைத்து இந்த படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
ஆனால் எஸ்ஏசி தான் இயக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்த தயாரிப்பாளர் சுப்பையா எஸ்ஏசியின் உடல்நிலையை நான் பார்த்துக்கொள்கிறேன். அவர் விஜயகாந்த் நடிக்கும் காட்சிகளை மட்டும் இயக்கி விட்டு போகட்டும்.. மற்ற நாட்களில் அவரது உதவியாளர்களை வைத்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதி அளித்து அவரை படப்பிடிப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன்படியே தான் அந்த படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றதாம்.