சமீப வருடங்களாகவே திரையரங்குகளை பொறுத்தவரை பெரிய ஹீரோக்கள், இயக்குனர்களின் படங்களை நம்பித்தான் வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கின்றன. வருடத்திற்கு ரஜினி. கமல். விஜய் ஆகியோர் எப்படியும் ஒரு படங்களில் மட்டுமே நடிக்கிறார்கள்.. இப்படி முன்னணி நடிகர்களின் படங்கள் 15 வெளியாகிறது என வைத்துக் கொண்டாலும் மீதி நாட்களில் எல்லாம் சின்ன பட்ஜெட் படங்களை வைத்து தான் அவர்கள் தியேட்டர்களை நடத்தி வருகிறார்கள்.
ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்த வசூலை அவர்களுக்கு தருவதில்லை. அதிலும் சமீபத்தில் பொங்கலுக்கு வெளியான கேப்டன் மில்லர், அயலான் படங்கள் ஓரளவு மட்டுமே திரையரங்குகளுக்கு வசூலை பெற்று தந்தன. அந்த படங்களுக்கு பிறகு வெளியான படங்கள் எல்லாமே சின்ன பட்ஜெட் படங்களாக, பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் பங்களிப்பு இல்லாமல் வெளியாவதால் படங்கள் வெளியான இரண்டு நாட்களிலேயே திரையரங்குகள் காற்றாடுகின்றன.
சமீபத்தில் கூட மிகப்பெரிய காம்ப்ளக்ஸ் தியேட்டர் ஒன்றை இழுத்து மூடி விட்டார்கள் என்கிற தகவல் வெளியானது. இந்த நிலையில் தான் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தமிழகத்திலும் வெளியாகி தமிழ் ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்து விட்டது.
ஒரு பிரபல தமிழ் நடிகரின் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்து வசூலையும் வாரிக்குவித்து வருகிறது. இதனால் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள சிறு நகரங்களில் கூட தற்போது இந்த படத்தை ரிலீஸ் செய்து கல்லா கட்டி வருகிறார்கள் தியேட்டர்காரர்கள்..
தற்போது தான் மார்ச் மாதம் பாதியே கடந்திருக்கிறது. இனி தமிழ் புத்தாண்டில் தான் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. அதுவரை கோடையில் பெய்த மழையாக தியேட்டர்காரர்கள் இந்த படத்தின் வசூலால் குஷி அடைந்திருக்கிறார்கள்.
இதேபோன்று மலையாளத்தில் இதற்கு முன்னதாக வெளியான பிரேமலு என்கிற படமும் மலையாளத்தில் 100 கோடி வசூலித்து விட்டு தெலுங்கிலும் கடந்த வாரம் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அந்த படத்தையும் தமிழில் டப்பிங் செய்து வெளியிட இருக்கிறார்கள். இத்தனைக்கும் அறிமுகம் அதிகம் இல்லாத நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் மலையாளம் தெலுங்கில் இரண்டிலுமே வெற்றி பெற்று விட்டதால் தமிழில் நிச்சயம் வரவேற்பைப் பெறும் என்கிற நம்பிக்கையில் படத்தின் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள்.
அதே போல மஞ்சும்மேல் பாய்ஸ் மூலம் வசூலை வாரிகுவித்த திரையரங்குகள் இந்த பிரேமலு படத்தின் வருகையையும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனால் தமிழ் புத்தாண்டுக்குள் தங்களது படங்களை ரிலீஸ் செய்து விடலாம் என காத்திருந்த சில சின்ன பட்ஜெட் தமிழ் படங்கள் செய்வதறியாது கையை பிசைந்து கொண்டு இருக்கின்றனவாம்.