தமிழில் அத்திப்பூத்தாற்போல சில படங்கள், அதுவும் குறைந்த பட்ஜெட்டில், பெரிய அளவில் பிரபலமில்லாத நடிகர்கள் நடித்து, அதிலும் அறிமுக இயக்குனர்கள் இயக்கி மிகப்பெரிய வெற்றியை பெறுவது உண்டு. அந்த வகையில் கடந்த வருடம் இப்படித்தான் குட் நைட் என்கிற படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
அந்த படத்தில் நடித்த நடிகர் மணிகண்டனுக்கு ஜெய் பீம் படத்தை தொடர்ந்து இன்னும் ஒரு அதிக மைலேஜ் கொடுத்த படமாக அது அமைந்தது. இந்த படத்தை இயக்குனர் விநாயகன் சந்திரசேகரன் என்பவர் இயக்கியிருந்தார். இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயனே விரும்பி இவரை தனது படத்தை இயக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்த படத்திற்கான கதை விவாதம் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இடை இடையே அங்கே சென்று பார்த்து வரும் சிவகார்த்திகேயன் நீங்கள் வழக்கம் போல ராவாக கதை பண்ணினாலும் கூட என்னையும் மனதில் வைத்துக் கொண்டு கொஞ்சம் பாடல் காட்சி கொஞ்சம் மாஸ் கலந்து கதையை உருவாக்குங்கள் என்று ஒரு நிபந்தனையை விதித்துள்ளாராம். சிவகார்த்திகேயனின் கோரிக்கையையும் ஏற்று இந்த இயக்குனர் தனது இரண்டாவது படத்தில் சாதிக்கிறாரா என பார்க்கலாம்.