ராஜா ராணி படத்தின் மூலம் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறிய அட்லீ அதைத்தொடர்ந்து விஜய்யை வைத்து அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறினார். அது மட்டுமல்ல, கடந்த வருடம் பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்து நம்பர் ஒன் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற படத்தை இயக்கி அந்த படத்திற்கும் ஆயிரம் கோடி வசூலை பெற்று தந்தார்.
இதைத்தொடர்ந்து அவர் அடுத்து இந்தியில் படம் இயக்குகிறாரா அல்லது தெலுங்கில் அல்லு அர்ஜுன் படம் இயக்குகிறாரா இல்லையென்றால் விஜய் அரசியலுக்காக போவதாக சொல்கிறாரே அதற்குள் விஜய்யின் கடைசி படத்தை இவர் இயக்கப் போகிறாரா என்பது போன்று சோசியல் மீடியாவில் பலரும் ஆருடம் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் அட்லீ, சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முக்கிய தூணாக இருக்கும் கண்ணன் இருவரும் விஜய்யின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்துள்ளார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் இந்த சந்திப்பு நீடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து விஜய்யின் கடைசி படத்தை அட்லீ தான் இயக்கப் போகிறார் என்பது போன்று செய்திகள் வெளியாகி வருகின்றன. அப்படி என்றால் அல்லு அர்ஜுன் படத்தை அவர் இயக்க வில்லையா என்று கேட்டால் அதுவும் சஸ்பென்ஸ் ஆக தான் இருக்கிறது என்கிறார்கள்.
இன்னும் சிலரோ ஒருவேளை அல்லு அர்ஜுன் படத்தை இயக்கப் போகிறேன் என்பதற்காக விஜய்யிடம் சொல்லி ஆசீர்வாதம் வாங்க சென்றாரா என்று கூட கூறி வருகிறார்கள். அட்லீ அக்ரீமெண்ட் போட சென்றாரா ? இல்லை ஆசீர்வாதம் வாங்க சென்றாரா ? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். அவரது அடுத்த பட அறிவிப்பு வரும்போது இதற்கான விடை தெரியவரும்.