தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை பெரும்பாலும் கதாநாயகிகள் மலையாளத்திலும் அதன்பிறகு தெலுங்கிலும் இருந்துதான் புதிதாக உருவாகிறார்களே தவிர, தமிழ் திரை உலகம் அவ்வளவாக கதாநாயகிகளை உற்பத்தி செய்வதில்லை. இத்தனைக்கும் புதுமுக கதாநாயகிகள் என வருடத்திற்கு பல பேர் அறிமுகமானாலும் ஒரே படத்திலோ அல்லது ஒரே வருடத்தில் சொல்லிக்கொள்ளும் வகையான வளர்ச்சியையோ பெறுகிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
ஆனால் மலையாளத்தில் வருடத்திற்கு ஒரு கதாநாயகியாவது புகழ் வெளிச்சம் பெற்று தென்னிந்திய அளவில் பெரிய நடிகையாக மாறிவிடுகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் மலையாளத்தில் பிரேமலு என்கிற ஒரு படம் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ என்பவர் நடித்துள்ளார். மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப்படம் சமீபத்தில் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.
இந்த படத்தை இயக்குனர் ராஜமவுலியின் மகன் எஸ்.எஸ். கார்த்திகேயா தான் தெலுங்கில் வெளியிட்டிருந்தார். அந்த அளவிற்கு இந்த படம் அவரை கவர்ந்து விட்டது. இந்த படத்தை பார்த்த ராஜமவுலியும் இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசும்போது கதாநாயகி மமிதா பைஜூ பற்றி புகழ்ந்து தள்ளிவிட்டார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “கடந்த 30 வருடங்களுக்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தில் நடித்த கிரிஜா மற்றும் தற்போதைய நடிகை சாய் பல்லவி ஆகியோரைப் போல நீண்ட நாட்களுக்கு பேசப்படும் நடிகையாக மமிதா பைஜூ இருப்பார்.. இனிவரும் நாட்களில் அவர் மிகப்பெரிய நடிகையாக மாறுவார்” என்று மனம் விட்டு பாராட்டி உள்ளார். சினிமா உலகின் வசிஷ்டர் என்று சொல்லப்படும் ராஜமவுலி தன்னை இப்படி பாராட்டியதால் மனம் குளிர்ந்து போயிருக்கிறார் மமிதா பைஜு.