பிரம்மாண்ட படங்களை இயக்குவதற்கு பெயர் போன ஷங்கர் இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒரு படம் தான் இயக்குவார். ஆனால் காலம் இப்போது அவரை ஒரே சமயத்தில் இரண்டு படங்களை மாறி மாறி இயக்கும் அளவிற்கு கொண்டு வந்து விட்டது.
அந்த வகையில் ஒரு பக்கம் கமல் நடிப்பில் இந்தியன் 2, இன்னொரு பக்கம் ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் ஆகிய படங்களை மாறி மாறி இயக்கி வருகிறார். இரண்டுமே கிட்டத்தட்ட இறுதிக்கட்ட படப்பிடிப்பை நெருங்கி விட்டன. இதில் கேம் சேஞ்சர் படத்தில் ராம்சரண், அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கின்றனர்.
பொதுவாகவே ஷங்கர் படப்பிடிப்பிலிருந்து காற்று கூட வெளியே போகாது என்று சொல்வார்கள். அந்த வகையில் படப்பிடிப்பு தளத்தில் யாரும் யாரையும் புகைப்படம் எடுக்கவும் அதை வெளியே அனுப்பவும் கூடாது என்பதை கண்டிப்பாக கடைபிடித்து வருகிறார் ஷங்கர். ஆனால் கடந்த சில நாட்களில் படத்தின் நாயகன் ராம்சரண், அதைத் தொடர்ந்து நாயகி கியாரா அத்வானி ஆகியோர் படப்பிடிப்பில் நடித்தபோது எடுக்கப்பட்ட அவர்களது கதாபாத்திர தோற்றம் கொண்ட புகைப்படங்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சோசியல் மீடியாவில் அடுத்தடுத்து வெளியாகின.
படப்பிடிப்பை ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் பலத்த பாதுகாப்புடன் நடத்தியும் கூட எப்படி இந்த புகைப்படங்கள் கசிந்தன என்று அதிர்ச்சியில் இருக்கும் படக்குழுவினர் யார் அந்த கருப்பு ஆடு என்று தேடி வருகின்றனர்.