நடந்து முடிந்த விஷயத்தை மீண்டும் நமக்கு காட்சிப்படுத்தி தமிழ்நாடு கேரளா மக்களிடையே ஒரு தேவையற்ற மனக்கசப்பை உண்டாக்க வந்திருக்கும் படம் ரெபல்
தமிழகம் மற்றும் கேரளம் ஆகிய மாநில எல்லைகளை ஒட்டி அமைந்திருக்கும் மூணாறு எனும் மலை பிரதேசத்தில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களாக பணியாற்றும் சுப்ரமணிய சிவா – ஆதிரா எனும் தம்பதிகளின் மகனான ஜீ.வி. பிரகாஷ் குமார், சில போராட்டங்களுக்குப் பிறகு, கேரளத்தில் உள்ள பாலக்காடு அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. இவரின் நெருங்கிய நண்பரும், விளிம்பு நிலை தொழிலாளர் ஒருவரின் மகனுமான செல்வராஜுக்கும் (ஆதித்யா பாஸ்கர்) பட்டப் படிப்பில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. இவர்கள் இருவரும் கல்லூரியில் சேர்வதற்காக ஆர்வத்துடன் பாலக்காடு செல்கிறார்கள். .
கல்லூரி என்றால் ராக்கிங் இருப்பது இன்று வரை யதார்த்தமானது. அதை யாராலும் எளிதாக கடந்து விட இயலாது. இதன் எல்லை மீறும் போது அவை மாணவர்களுக்குள் பிரச்சனையையும் உண்டாக்குகிறது. பாலக்காடு அரசு கல்லூரியிலும் மலையாள மொழி பேசும் மாணவர்களுக்கும், தமிழ் மொழி பேசும் மாணவர்களுக்கும் இடையே மொழி ரீதியிலான.. கலாச்சார ரீதியிலான.. அணியும் உடை ரீதியிலான.. வெறுப்பு உணர்வு மாணவர்களிடையே மேலோங்குகிறது. இதனால் கதிரின் நண்பரான செல்வராஜ் உயிரிழக்கிறார்.
இந்த நிலையில் அந்தக் கல்லூரியில் மாணவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் மலையாள மொழி பேசும் இரு நேர் எதிர் அரசியலில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்.. தங்களுக்கு தமிழ் பேசும் மாணவர்களின் வாக்கு முக்கியம் என்பதற்காக இவர்களுடன் எதிர்பாராத விதமாக நட்பு பாராட்டுகிறார்கள். இந்தத் தருணத்தில் தமிழ் பேசும் மாணவர்களின் தலைவராக உயர்ந்திருக்கும் கதிர்.
தமிழ் பேசும் மாணவர்களுக்கு என்று ஒரு கட்சியை உருவாக்கி, இவர்களை அரசியல் ரீதியில் எதிர்கொள்ள முடிவெடுக்கிறார். இந்த முடிவு அவர்களது உரிமையை மீட்டெடுத்ததா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை.
கேரளா என்றால் இடதுசாரிகளும், கதர் துண்டுகளும் தான் என அங்குள்ள யதார்த்த அரசியலை இயக்குநர் நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார். .
கதிர் என்ற வேடத்தில் நடித்திருக்கும் ஜீ.வி. பிரகாஷ் குமாருக்கு எக்சன் நாயகன் வேடம் முழுமையாக பொருந்தவில்லை என்றாலும், அதற்காக முயற்சி செய்திருக்கிறார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகை மமீதா பைஜு – கல்லூரியில் ஜீ.வி. பிரகாசுடன் அறிமுக காட்சிகளில் இளமையாகவும், ரசிக்க வைக்கும் வகையிலும் இருந்த அவரது கதாபாத்திரம், ஜீ.வி. பிரகாஷின் தோழியாக அறிமுகமாகும் போது இருக்கும் ஈர்ப்பு … அவர் மாணவர்களுக்கான தேர்தல் அரசியலில் ஈடுபடும்போது காணாமல் போகிறது.
ஆண்டனி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகர் வெங்கிடேஷ்- வில்லத்தனத்தில் ரசிக்க வைக்கிறார்.
செல்வராஜ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதித்யா பாஸ்கரின் சிகை அலங்காரம், அவரது தோற்றபொலிவு, கதாபாத்திர வடிவமைப்பு..என அனைத்தும் ரசிக்கும் வகையில் இருக்கிறது.
கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் கருணாஸின் நடிப்பும் பாராட்டும் வகையில் இருக்கிறது. நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் சுப்ரமணிய சிவாவின் நடிப்பும் யதார்த்தம்.
அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு ரசிகர்களை மூணாறு, பாலக்காடு ஆகிய கதை நடைபெற்ற சம்பவ ஸ்தலத்திற்கு நேரடியாக அழைத்துச் செல்கிறது. வெற்றி கிருஷ்ணனின் படத்தொகுப்பு நேர்த்தி.
ரெபெல் இது போராட்டம் அல்ல