நயன்தாராவை பொருத்தவரை கடந்த சில வருடங்களாகவே முன்னணி நடிகர்களின் படங்களில் மட்டும் கதாநாயகியாக நடித்துக் கொண்டு இன்னொரு பக்கம் கதைக்கும் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களில் அவர் நடித்த அறம் உள்ளிட்ட பல படங்கள் கதாநாயகியை மையப்படுத்தி வெளியாகின. அதில் சில வெற்றி பெற்றாலும் சில பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
இருந்தாலும் தற்போது திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகளுக்கும் தாயாகி விட்டதால் டூயட் பாடும் வாய்ப்புகளை ஒதுக்கிவிட்டு கதையின் நாயகியை மையப்படுத்தும் படங்களை மட்டும் தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளார்.
அந்த வகையில் குரங்கு பொம்மை என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் நித்திலன் சொன்ன கதையில் ஏற்கனவே நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார் நயன்தாரா. ஆனால் அதன்பிறகு அது பற்றி அவர் ஏதும் கண்டுகொள்ளாததால் இயக்குனர் நித்திலன் தற்போது விஜய் சேதுபதி நடித்துவரும் அவரது ஐம்பதாவது படமான மகாராஜா என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் நித்திலனை மீண்டும் அழைத்த நயன்தாரா இந்த படத்தை உடனடியாக துவக்குங்கள் என்று கிரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம். அனேகமாக மகாராஜா படத்தை முடித்துவிட்டு நயன்தாரா நடிக்கும் படத்தை நித்திலன் துவங்குவார் என எதிர்பார்க்கலாம்.