60, 70 வருடங்களுக்கு முன்பு அந்த நாள் என்ற திரைப்படம் வெளிவந்தது. இந்த க்ரைம் ஸ்டோரி அந்த காலத்தில் மிகவும் பிரபலமானது. கொலையும் செய்வாள் பத்தினி என்ற பழமொழியை கதையின் கருவாக்கி திரைக்கதை உருவாக்கி படம் வெளியாகி இருந்தது. அந்தத் திரைக்கதைக்கு புது வண்ணம் பூசி புது வாசனை தெளித்து கொலையும் செய்வாள் காதலி என்ற கருவைக் கொண்டு திரைக்கதை வடிவமைத்து வெளிவந்திருக்கும் படம் நேற்று இந்த நேரம்.
நிகில் ( ஷாரிக ஹஸன்) எனும் இளைஞரை சுற்றி கதை நடைபெறுகிறது. நிகிலின் பெற்றோர்கள் விவாகரத்து செய்து கொள்கிறார்கள். அதன் பிறகு நிகிலின் தாய் வேறொரு ஆணை மணந்து கொண்டு வெளிநாட்டிற்கு சென்று விடுகிறார். அவருடைய தந்தை மணமுறிவை ஏற்க மனமில்லாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகி இறக்கிறார்.
இதனால் நிகில் திருமணம் என்ற பந்தத்திற்குள் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. மூன்று ஆண்டுகளாக ரித்திகா எனும் பெண்ணை காதலிக்கும் நிகில், அவள் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்க.. நிகில் திருமண வேண்டாம். ஆனால் லீவ் இன் உறவில் நீடிக்கலாம் என சொல்கிறார்.
இதை ரித்திகா ஏற்க மறுக்கிறார். இந்நிலையில் தன்னுடைய நண்பர்களின் வாழ்வில் சூறாவளியை உண்டாக்கிய நிகிலை கொலை செய்ய ரித்திகா தலைமையிலான அவருடைய நண்பர்கள் தீர்மானிக்கிறார்கள். அத்துடன் இந்த கொலையை மலை பிரதேசம் ஒன்றில் தொடர்ச்சியாக கொலைகளை செய்து வரும் முகம் தெரியாத ஒருவர் மீது பழி சுமத்தவும் திட்டமிடுகிறார்கள். இவர்களின் திட்டம் பலன் அளித்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.
மலைப்பிரதேசம் ஒன்றின் கல்லூரி படிப்பு நிறைந்தவுடன் பொழுதுபோக்கிற்காக நண்பர்கள் அனைவரும் (நிகில்- ரோஹித் -ஆதித்யா- ஹிருத்திக் -நித்யா- ரித்திகா- ஸ்ரேயா-) ஒன்றிணைந்து பயணிக்கிறார்கள். நிகில் காணாமல் போகிறார். இதனால் ரோஹித் ( திவாகர் குமார்) காவல்துறையில் நிகில் காணவில்லை என புகார் அளிக்கிறார். இதனை காவல் துறை உதவி ஆய்வாளர் விசாரிக்கத் தொடங்குகிறார்.
நண்பர்கள் அனைவரையும், தனித்தனியாகவும் கூட்டாகவும் விசாரிக்கிறார். விசாரணையின் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையும் முரண்பட்ட தகவல்களை தெரிவிக்கிறார்கள். இதனால் காவல்துறை தடுமாறுகிறது. ஒரு கட்டத்தில் நிகிலும், ரோகித்தும் இறந்த விடயமும், அவர்களது சடலமும் கிடைக்கிறது. மேலும் இவர்களை அப்பகுதியில் தொடர் கொலைகளை செய்து வரும் முகமூடி கொலைகாரன் தான் கொலை செய்திருப்பான் என காவல்துறையும் நம்புகிறது.
நிகில் போதை பொருளை பாவிக்கிறான். அதனை நண்பர்களுக்கும் பணத்தை பெற்றுக் கொண்டு தருகிறார். பெண்களை காதல் என்ற போர்வையில் அனுபவித்து அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்துக் கொள்கிறான். இதனால் வெளியில் சொல்ல முடியாத தர்ம சங்கடத்தை பெண்கள் அனுபவிக்கிறார்கள்.
அதனால் அவனை எப்படி திட்டமிட்டு, அவனுடைய நண்பர்கள் கொலை செய்கிறார்கள் என்பதை சுவாரசியமாக இயக்குநர் விவரித்திருக்கிறார். நடிகர்கள் அனைவரும் தங்களுக்கான நடிப்பை இயக்குநர் எதிர்பார்த்த அளவிற்கு ஷட்டிலாக வழங்கி இருக்கிறார்கள். இதில் ஸ்ரேயாவாக நடித்திருக்கும் நடிகை மோனிகா ரமேஷின் இளமையும், காந்தம் போல் இழுக்கும் கவர்ச்சி கண்களும் ரசிகர்களுக்கு ஆறுதல் பரிசு. நிகிலாக நடித்திருக்கும் நடிகர் ஷாரிக் ஹஸன் கவர்ச்சி மிகுந்த ஆணாக நடித்திருக்கிறார். சிக்ஸ் பேக் தோற்றத்துடன் இருக்கும் நிகில்.. சில இடங்களில் நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார்.
முதல் பாதி திரைக்கதையில் பொலிஸ் விசாரணையும், ஒரே கோணத்திலான விசாரிப்பும் ரசிகர்களை போரடிக்கிறது. இரண்டாம் பாதி திரைக்கதையில் சுவாரசியமான முடிச்சுகள் அவிழ்க்கப்படுவதால் ரசிக்க முடிகிறது. அதிலும் உச்சகட்ட காட்சியில் தொடர் கொலைகளை செய்யும் கொலையாளி கதாபாத்திரம் செய்யும் நடவடிக்கை சுவராசியத்தை மேலும் அதிகப்படுத்துகிறது
கொலையென்று தெரியாமல் இருக்க ஹார்ட் அட்டாக் இறந்தது போல் கொலை செய்யும்போது எதற்காக அந்த பாடியை புதைக்க வேண்டும் ?