ஆண் குளிர்.. பெண் மழை.. இது டைட்டிலின் விளக்கம். கல்யாணமாகி குழந்தை இல்லாமல் இருக்கும் கணவன் மனைவி கணவனிடம் குறை தெரிந்தால் அவன் மனம் உடைந்து விடுவான் என விந்தணுவை விலைக்கு வாங்கி கர்ப்பமாகி கணவனை தந்தையாக்கி உண்மையை உணர்த்தும் போது ஏற்படும் பிரச்சனை விளைவு வெப்பம் குளிர் மழை.
பெத்த பெருமாள் ( திரவ்) – பாண்டி ( இஸ்மத் பானு) இவர்கள் இருவரும் மனமொத்த தம்பதிகள். இவர்களுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் வாரிசு இல்லை. குழந்தை பாக்கியம் குறித்து தம்பதிகளின் நண்பர்கள் ஐ வி எஃப் எனப்படும் செயன்முறை கருத்தரிப்பு குறித்த விடயங்களை விவரித்த போதும்,, அதனை பெத்த பெருமாள் ஏற்க மறுக்கிறார்.
குழந்தை பாக்கியம் என்பது ஆண்டவனின் அருளால் இயற்கையாக நடைபெற வேண்டும் என்பதில் பெத்த பெருமாள் உறுதியாக இருக்கிறார். ஆனால் பெத்த பெருமாளின் தாயார் தங்களுடைய குடும்பத்திற்கு வாரிசு ஒன்று வேண்டும் என்றும், இதற்காக வேறொரு திருமணத்தை செய்து கொள்ள வேண்டும் என்றும் மகனிடமும், மருமகளிடமும் வற்புறுத்துகிறார்.
ஒரு எல்லைக்கு மேல் பாண்டி.. பெத்த பெருமாளிடம் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு உங்களது அம்மாவின் ஆசையை நிறைவேற்றுங்கள் என சொல்கிறார். இந்த தருணத்தில் பாண்டியின் தாய் இறக்கிறார். இதனால் தனித்து விடப்பட்ட பாண்டி… அடுத்து என்ன செய்வது? என்று தெரியாமல் தவிக்க.. மனைவி மீது மாறாத அன்பு வைத்திருக்கும் பெத்த பெருமாள்.. வைத்தியசாலைக்கு சென்று செயன்முறை கருத்தரிப்பு குறித்த பரிசோதனையை மேற்கொள்ள சம்மதம் தெரிவிக்கிறார்.
பெத்த பெருமாளின் உயிரணு பரிசோதனையில் அவரால் கருத்தரிக்க இயலாது என்ற ஒரு அறிவியல் ரீதியான உண்மையை மருத்துவர்கள் அவரது மனைவியான பாண்டியிடம் தெரிவிக்கிறார்கள். அத்துடன் உயிரணு தானம் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் எடுத்துரைக்கிறார்கள்.
ஒரு புறம் கணவனின் அன்பும் வேண்டும் மறுபுறம் மாமியாரின் வாரிசு கேள்விக்கும் பதிலளிக்க வேண்டும் என தவிக்கும் பாண்டி.. கணவனிடம் அனுமதி பெறாமல் உயிரணு தானம் மூலம் குழந்தை பெறுகிறாள். பாண்டிக்கு பிறந்த குழந்தை தனக்கு பிறந்த குழந்தை என நினைத்து, பெத்த பெருமாள் மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைக்கிறார்.
பெத்த பெருமாளின் எல்லையற்ற சந்தோஷத்தை பார்த்த பாண்டி.. உண்மையை மறைப்பதால் ஏதாவது விபரீதம் நிகழ்ந்துவிடுமோ..! என்ற அச்சத்தில்.. குழந்தை பற்றிய உண்மையை கணவனான பெத்த பெருமாளிடம் தெரிவிக்கிறார். பெத்த பெருமாள் அதிர்ச்சி அடைகிறார். இதிலிருந்து அவர் மீண்டு மனைவியுடன் அன்பாக இல்லறத்தை தொடர்ந்தாரா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை.
செயன்முறை கருத்தரிப்பு குறித்த முழுமையான விபரங்கள் விவரிக்கப்படவில்லை என்றாலும்.. செயன்முறை கருத்தரிப்பு மூலம் பிறந்த குழந்தைக்கும், அவருடைய தந்தைக்கும் இடையேயான உணர்வு ரீதியிலான புரிதல் குறித்த விடயங்கள் இடம்பெற்று இருப்பதால் ஓரளவு கவனம் ஈர்க்கிறது.
கதை நிகழும் காலகட்டம் குறித்த தவறுகள் இருந்தாலும், ஸ்மார்ட் போன் பயன்பாடு குறித்த முரண்பாடுகள் இருந்தாலும், இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்கள் குறிப்பிட்ட காலம் வரை ஆலயத்திற்கு சென்று இறைவனை வணங்குவது குறித்த வழிப்பாட்டு முறைகளில் முரண்கள் இருந்தாலும்.., கதை மண் மணம் மாறாமல் சொல்லப்பட்டதால் பாராட்டைப் பெறுகிறது.
அதிலும் உச்சகட்ட காட்சியில் தன் மனைவியின் நடவடிக்கையால் தன்னுள் ஏற்பட்ட மாற்றத்தை பெத்த பெருமாள்.. உணர்வதும், அதனை பாண்டியிடம் விவரிப்பதும் ரசிக்க வைக்கிறது.
பின்னணி இசையை விட பாடல்கள் நன்றாக இருக்கிறது. எம். எஸ். பாஸ்கர் தன்னுடைய வழக்கமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். நடிகை இஸ்மத் பானு பாண்டி கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது மாமியாராக நடித்திருக்கும் நடிகை ரம்பாவின் துருத்தலான ஒப்பனையை தவிர்த்து பார்த்தால் அவரது நடிப்பும் ஓகே ரகம். பெத்த பெருமாளாக நடித்திருக்கும் நடிகர் திரவ் உணர்ச்சிவசப்பட்டு பேசும் வசனங்கள் புரியவில்லை என்றாலும் அவரது நடிப்பு தேர்ச்சி ரகம்தான்.
கதை நேர்க்கோட்டில் பயணிப்பதால்.. சுவாரசியமான திருப்பங்களை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு தொய்வை தருகிறது. காளை மாடு பசுமாடு சேர்க்கை, இனவிருத்தி, விந்தணு வாங்கி, டெஸ்ட் பேபி, மாடையும் மனுஷனும் ஒன்னு தான் காட்டி இருக்கிற இயக்குனரை பாராட்டுறதா ? திட்டுறதா ?