லோகேஷ் கனகராஜ் விஜய், கமல் என தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி விட்டு, தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த்துடன் அவரது 171வது படத்திற்காக கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கான கதை விவாத வேலைகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லுக் குறித்து சமீபத்தில் ஒரு போஸ்டர் வெளியானது. அது படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் என சில யூகங்களை கிளப்பி விட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் தங்க கடத்தல் மன்னனாக நடிக்கிறார் என்று சிலரும் இந்த படம் டைம் ட்ராவல் கதையாக உருவாகிறது என்று சிலரும் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே தான் இயக்கிய கைதி படத்தின் பாணியில் உருவாக்க இருப்பதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது கைதி படத்தின் கதை ஒரே நாள் இரவில் விடிவதற்குள் நடக்கும் கதையாக உருவாகி இருந்தது. அப்படி உருவானதே அந்த கதைக்கு விறுவிறுப்பையும் பரபரப்பையும் சேர்த்தது.
அதே பாணியில் தான் தற்போது ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படத்தின் கதையும் ஒரே நாளில் நடக்கும் கதையாக லோகேஷ் கனகராஜ் உருவாக்கி வருகிறார் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இத்தனை வருடங்களில் அவர் நடித்துள்ள படங்களில் இதுதான் முதன்முறையாக ஒரே நாளில் நடக்கும் கதையாக உருவாகும் படம் என சொல்லலாம்.