தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை எந்த இசை வெளியீட்டு விழாக்களிலும், குறிப்பாக சின்ன பட்ஜெட் படங்கள் என சொல்லிக்கொண்டு வெளியாகும் உப்புமா படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் தவறாமல் செட் பிராப்பர்ட்டியாக இடம் பெறுபவர்கள் என ஒரு குரூப் இருக்கிறார்கள். இவர்களில் இயக்குனர்கள் ஆர்வி உதயகுமார், பேரரசு, தயாரிப்பாளர் கே ராஜன் ஆகியோர் முக்கியமானவர்கள்.
இதில் ஆர்.வி உதயகுமார் ரஜினி, கமல், விஜயகாந்த் என முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கியவர். அதனால் கொஞ்சம் கதைகளை அடித்து விடுவார். அப்படி சமீபத்தில் ராமராஜன் நடித்த சாமானியன் பட விழாவில் கலந்து கொண்டு அவர் பேசும்போது தேவையில்லாம் ரஜினி பற்றி அவதூறான விஷயம் ஒன்றை பேசியுள்ளார்.
அதாவது தான் படம் இயக்குவதற்கு முன்பாக ஒரு டிஸ்ட்ரிபியூட்டராக இருந்ததாகவும் அந்த சமயத்தில் தர்மத்தின் தலைவன் படத்தை தான் வாங்கி விநியோகம் செய்ததில் நாலு கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறினார். அந்த சமயத்தில் ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் வந்ததாகவும் அதை வாங்கச் சொல்லி தன்னை சிலர் வற்புறுத்தினாலும் ராமராஜன் படம் வேண்டாம் ரஜினி படம் தான் வேண்டும் என வாங்கி நட்டமடைந்ததாக கூறியதோடு ராமராஜன் படம் பல கோடி லாபம் வசூலித்தது என்றும் அடித்துவிட்டார். இது ரஜினி ரசிகர்கள் அனைவரையும் செமையாக கடுப்பேற்றி உள்ளது. காரணம் இவர் சொன்ன எதுவுமே உண்மை இல்லை.
முதலில் தர்மத்தின் தலைவன் ஒரு மிகப்பெரிய வெற்றி படம். அடுத்ததாக அந்த படம் வெளியானது 1988 செப்டம்பர் மாதம். அதே போல கரகாட்டக்காரன் திரைப்படம் வெளியானது 1989 ஜூன் மாதம். இரண்டு படங்களுக்கும் இடையில் கிட்டத்தட்ட 10 மாத இடைவெளி இருக்கும்.
இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகிறது என்றால் இந்த படமா அந்த படமா என்கிற நிலை வந்தபோது ரஜினி படத்தை வாங்குகிறேன் ராமராஜன் படம் வேண்டாம் என இவர் சொல்லி இருக்கலாம். ஆனால் இரண்டும் வெவ்வேறு இடைவெளியில் ரிலீஸ் ஆகி இரண்டுமே வெற்றி பெற்ற நிலையில் இவர் எப்படி தர்மத்தின் தலைவன் படம் தோல்வி என்று கூறுகிறார் என தெரியவில்லை.
அது மட்டும் அல்ல படங்கள் வெளியான காலகட்டத்தில் பட தயாரிப்பு செலவு நடிகர்களின் சம்பளம் உள்ளிட்ட எல்லாமே லட்சங்களுக்குள்ளேயே அடங்கிவிட்டன. கோடிகள் என்பதெல்லாம் அதற்கு பிறகு தான் வந்தன. அப்படி ஒரு ஏரியாவை மட்டும் ஒன்பது லட்சத்திற்கு வாங்கிய உதயகுமாருக்கு எப்படி நான்கு கோடி நட்டம் ஏற்பட்டிருக்கும்.
தர்மத்தின் தலைவன் படத்தை தயாரிக்கவே ஒரு கோடி செலவாகி இருக்காதே.. இப்படி மேடை கிடைத்தது என்று மற்றவர்களை புகழ வேண்டும் என்பதற்காக ஆர்வி உதயகுமார் இப்படி உருட்டு உருட்டு என்று உருட்டுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என ரஜினி ரசிகர்கள் எச்சரித்துள்ளனர்.