பெரும்பாலும் முன்னணி ஹீரோக்கள் தாங்கள் நடிக்கும் படம் நஷ்டம் அடைந்து விட்டால் அந்த தயாரிப்பாளர்களை கண்டு கொள்ளாமல் சென்று விடுவார்கள். இதுதான் தமிழ் சினிமாவில் வழக்கமாக இருந்து வருகிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த் மட்டும் விதிவிலக்காக தன்னால் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களை அழைத்து மிகப் பெரிய அளவில் நஷ்ட ஈடு தொகையை கொடுத்து அவர்களை கைதூக்கி விடுவார். இதை ஒரு தார்மீக கடமையாகவே வைத்துள்ளார் ரஜினிகாந்த்.
அதுமட்டுமல்ல கடந்த 20 வருடங்களுக்கு முன்பு அருணாச்சலம் என்கிற படத்தை அவர் தயாரித்தபோது தன்னுடன் பயணித்த நலிவடைந்த சில நடிகர்கள், தயாரிப்பாளர்கள் எட்டு பேரை ஒன்றாக சேர்த்து அந்த படத்தை தயாரித்தார்.
இத்தனைக்கும் தன் கையில் இருந்து காசை போட்டு படத்தை தயாரித்து அதில் வந்த லாபத்தை எட்டாக பிரித்து அந்த எட்டு பேருக்கும் அளித்தார். அவர்கள் தங்களுடைய மீதி காலத்தை நிம்மதியாக கழிக்க அந்த தொகை உதவியது.
இந்த நிலையில் தான் நடிகர் விஜய்யும் தன்னை வைத்து படம் எடுத்து பாதிக்கப்பட்ட பழைய தயாரிப்பாளர்கள் ஆறு பேரை அழைத்து ஆளுக்கு 5 லட்சம் ரூபாய் உதவித்தொகை கொடுத்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது இப்போது அல்ல, மோகன்லாலுடன் இணைந்து ஜில்லா என்கிற படத்தில் நடித்தாரே அந்த சமயத்தில் நடந்தது.
விஜய்யையும் அஜித்தையும் ஒன்றாக சேர்த்து ராஜாவின் பார்வையிலே என்கிற படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சௌந்தர பாண்டியன் என்பவர்தான் இந்த தகவலை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த சந்திப்பின்போது எங்களைப் போன்ற பலரையும் ஒன்று சேர்த்து ஒரு படத்தை தயாரித்துக் கொடுத்தால் நாங்கள் அனைவரும் அதை வைத்து மிச்ச வாழ்க்கையை ஓட்டிக் கொள்வோம் என்று கோரிக்கை வைத்ததாகவும் அதற்கு சிரிப்பையே விஜய் பதிலாக தந்ததாகவும் கூறியுள்ளார் தயாரிப்பாளர் சௌந்தரபாண்டியன்.