மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம். வருபவர் நடிகர் மோகன்லால். இப்போதும் முன்னணி ஹீரோவாக நடித்து வருகிறார். இவரது மகன் பிரணவ் உதவி இயக்குனராக ஆசைப்பட்டு இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஆனாலும் இவர் நடிகராக வேண்டும் என்றுதான் எழுதப்பட்டு உள்ளது போலும்.
அந்த வகையில் இயக்குனர் ஜீத்து ஜோசப் மூலமாகவே ஆதி என்கிற படத்தில் ஹீரோவாக அறிமுகமான இவர் தற்போது மூன்று படங்களில் நடித்து விட்டார். இப்போது வினீத் சீனிவாசன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள வருஷங்களுக்கு சேஷம் என்கிற படம் வெளியாகி உள்ளது.
பொதுவாகவே மற்ற எந்த சினிமா வாரிசுகளை போலவும் இவர் ஆரம்ப காலத்தில் இருந்தே தன்னை வெளியே காட்டிக் கொள்ள விரும்பியதில்லை. அதே போல படத்தில் நடித்து முடித்து விட்டால் அத்துடன் தனது வேலை முடிந்து விட்டது என்றும் தனக்கும் படத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறி புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார்.
இவரது முதல் படம் இங்கே ரிலீசான சமயத்திலேயே இமயமலையில் தனியாளாக சுற்றிக் கொண்டிருந்தார் பிரணவ்.
அது கூட யாரோ ஒருவர் போட்டோ எடுத்து போட்ட பின் தான் தெரிய வந்தது.
இந்த நிலையில் தற்போதும் இந்த படத்திற்கு இயக்குனர் மற்றும் நடிகர்கள் நடிகைகள் தான் புரமோஷன் செய்கிறார்களே தவிர இவரை எங்கேயும் பார்க்க முடியவில்லை. தமிழில் அஜித் என்ன ரூட்டில் பயணிக்கிறாரோ இப்போதிருந்து அதையே இவரும் பின் தொடர ஆரம்பித்து விட்டார் என்றே தெரிகிறது.