தனது துள்ளல் இசையால் ரசிகர்களை கவர்ந்த விஜய் ஆண்டனி தற்போது நடிகராகவும் சிறந்த படங்களைக் கொடுத்து மில்லியன் கணக்கான சினிமா ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார். இசையமைப்பாளர், நடிகர் என்பதையும் தாண்டி அவர் தயாரிப்பாளராகவும் இருப்பதால் பார்வையாளர்களின் ரசனைக்கேற்ப தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து வருகிறார். இப்போது, அவர் நடிப்பில் உருவாகியுள்ள ரொமாண்டிக்- காமெடி திரைப்படமான ‘ரோமியோ’ ஏப்ரல் 11 ஆம் தேதி உலகளவில் பிரமாண்டமாக வெளியாகத் தயாராக உள்ளது.
படம் குறித்து நடிகர் விஜய் ஆண்டனி கூறுகையில், “விநாயக் கதையை என்னிடம் சொல்லி முடித்தவுடன் அதன் ஆழம் மற்றும் அதில் இருந்த உணர்வுப்பூர்வமான விஷயங்கள் என்னை கவர்ந்தன. எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எமோஷனல் கலந்த கதையாக உருவாகியுள்ள ‘ரோமியோ’ இன்றைய இளைஞர்களை நிச்சயம் கவரும் என நான் நம்புகிறேன். ரொமாண்டிக் காமெடி கதைகள் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் வரவேற்பு பெற்ற ஜானர். இந்த படமும் அப்படி ரசிகர்களுக்குப் பிடிக்கும். தான் சொன்னதை திரையில் கொண்டு வர வேண்டும் என முழு அர்ப்பணிப்போடு விநாயக் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் வேலை பார்த்தார்” என்றார்.
சக நடிகர்களுடன் பணிபுரிந்தது குறித்து விஜய் ஆண்டனி தெரிவித்ததாவது, “மிருணாளினி ரவியுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவம். மிகவும் அர்ப்பணிப்புள்ள நடிகை. எப்படிப்பட்ட சவாலான காட்சி கொடுத்தாலும் திறமையாக நடித்துவிடுவார். ஒட்டு மொத்த குழுவும் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. மதிப்பிற்குரிய தலைவாசல் விஜய் சாருடன் பணிபுரிந்தது எனக்குக் கிடைத்த பாக்கியம். ‘ரோமியோ’ அனைத்து வயதினருக்கும் ஏற்ற மகிழ்ச்சியான படமாக இருக்கும்” என்றார்.
’ரோமியோ’ படத்தை விநாயக் வைத்தியநாதன் எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். முதன்மை கதாபாத்திரங்களில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி நடித்துள்ளனர். இவர்களுடன் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா, மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பரத் தனசேகர் இசையமைத்திருக்க, ஃபரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.