உலக நடன தினத்தை முன்னிட்டு நடன இயக்குனரும் நடிகருமான ராபர்ட் மாஸ்டர் நேற்று 5000 பேர் பங்குபெறும் பிரமாண்ட நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் திறந்தவெளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் பிரபுதேவா கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பல நடன கலைஞர்களுடன் பல்வேறு கல்லூரி, பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் பலரும் தங்களது நடன திறமையை வெளிப்படுத்துவதற்காக கலந்து கொண்டனர். பிரபுதேவாவின் நூறு நடன பாடல்களை 100 நிமிடங்களில் ஆடி சாதனை செய்வதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
ஆனால் காலை ஏழு மணிக்கு துவங்கி எட்டரை மணிக்குள் முடிய வேண்டிய இந்த நிகழ்ச்சி பிரபுதேவா வர தாமதமானதால் துவங்கப்படாமல் நேரம் தள்ளிக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் வெயில் ஏறத்துவங்க பார்வையாளர்களாக வந்திருந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் வெயிலில் வாடுவதை பார்த்துவிட்டு விழா குழுவினரை கடுமையாக விமர்சித்து வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து வேறு வழியின்றி நல்ல வெயிலில் இந்த நிகழ்ச்சி துவங்கியது.
நடன நிகழ்ச்சி முடிந்தபின் இறுதியாக பிரபுதேவா ஹைதராபாத்தில் இருந்தபடி உடல்நிலை சரியில்லாததால் தன்னால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கலந்து கொள்ள முடியவில்லை என வருத்தம் தெரிவித்து இதில் பங்கு பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட வீடியோவை ஒளிபரப்பி நிகழ்ச்சியை முடித்தனர்.
இந்த நிகழ்ச்சி இங்கே நடக்கும் நேரத்தில் தான் ஏ.ஆர்.ரஹ்மான் பிரபுதேவா கூட்டணியிண் 25 வது வருடத்தை கொண்டாடும் விதமாக அவர் நடிக்கும் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் துவங்கியது. அந்த நிகழ்ச்சியில் பிரபுதேவா கலந்து கொள்கிறார் என்று தெரியாமல் இங்கே நடன நிகழ்ச்சிக்கு பிரபுதேவா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வருகிறார் என எப்படி அறிவித்தார்கள் என்று பார்வையாளர்கள் பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் பிரபுதேவா மும்பையில் இருக்கிறார், அவர் இந்த நிகழ்ச்சிக்கு வரப்போவதில்லை என்று தெரிந்தும் கூட அவர் இன்னும் சில நிமிடங்களில் வரப்போகிறார், கூட்டமாக இருப்பவர்கள் அவருக்கு வருவதற்கு வழி விட்டு ஒதுங்கி நில்லுங்கள் என்று தொடர்ந்து தொகுப்பாளர் கூறிக் கொண்டிருந்தது தான் மிகப்பெரிய நகைச்சுவை.