சின்னத்திரையில் இருந்து போராடி வெள்ளித்திரைக்கு ஒருவர் நடிகராக வருவதே பெரிய விஷயம். அப்படியும் வந்து கதாநாயகனாக மாறி தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்வது இன்னும் கடினமான ஒன்று. சிவகார்த்திகேயன், சந்தானம் போன்ற வெகு சிலர் மட்டுமே இதை சாதித்துள்ளனர். இந்த பட்டியலில் நடிகர் கவின் தற்போது தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்
கடந்த வருடம் அவர் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து நல்ல படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இளன் என்பவர் இயக்கத்தில் சினிமா பின்னணியில் உருவாகியுள்ள ஸ்டார் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் கவின். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த படம் குறித்த பிரமோஷன் நிகழ்ச்சியில் கவின் பேசும்போது, “ஒரு முறை விக்ரம் பிரபு நடித்த சத்ரியன் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தேன். ஆனால் படத்தின் நீளம் கருதி கடைசியில் நான் நடித்த காட்சிகளை நீக்கி விட்டார்கள். அப்போது எனக்கு மனதில் ரொம்ப வலி ஏற்பட்டது.
இது குறித்து யுவன் சங்கர் ராஜாவிடம் பேசும் போது பகிர்ந்து கொண்டேன். அப்போது அவர், இன்று நடக்கவில்லை என்றால் நாளை நடக்கும் என்று கூறினார். இது பெரும்பாலும் பொதுவாக எல்லோரும் ஆறுதலுக்காக சொல்வது போல இவரும் சொல்லுகிறார் என்று நினைத்தேன். ஆனால் அந்த வார்த்தைகள் எல்லாம் உண்மைதான் என்பதை இந்த படத்தின் தெரிந்து கொண்டேன்” என்று கூறியுள்ளார்.