கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் கிட்டத்தட்ட புது முகங்களை வைத்து மஞ்சுமேல் பாய்ஸ் சென்ற படம் வெளியானது. கொடைக்கானலில் நடிகர் கமல் மூலம் புகழ்பெற்ற குணா குகையையும் அந்த குகையை பார்ப்பதற்காக கேரளாவிலிருந்து சுற்றுலா வந்தபோது சென்ற 10 இளைஞர்களில் ஒருவர் அங்கிருந்து பள்ளத்திற்குள் தவறி விழுந்து விடுவதும் அவரைக் காப்பாற்ற நண்பர்கள் போராடுவதும் தான் இந்த படத்தின் கதை.
அந்த நண்பர்களில் ஒருவர் தானே அந்த 100 அடிக்கும் அதிகமான பள்ளத்தில் கயிறு கட்டி இறங்கி கீழே விழுந்து கிடந்த நண்பனை உயிருடன் காப்பாற்றி மேலே கொண்டு வருவார். இது 2006ல் கொடைக்கானலில் குணா குகையில் நிஜத்திலேயே நடந்த சம்பவம் தான். அதை மையப்படுத்தி தான் இந்த படம் உருவாகி உள்ளது.
அப்படி அந்த சமயத்தில் இப்படி குழிக்குள் அந்த இளைஞர் விழுந்ததும் கொடைக்கானலில் உள்ள போலீசாரிடம் சென்று இந்த கேரள இளைஞர்கள் உதவி கேட்டபோது சரியாக உதவி செய்யாததுடன் இந்த இளைஞர்களையே சந்தேகப்பட்டு போலீஸார்கள் அடித்துள்ளனர். அந்த தகவலும் தற்போது இந்த படம் மூலமாகவும் படம் வெளியான பிறகு சம்பந்தப்பட்ட நிஜ நபர்கள் மூலமாகவும் வெளியே வந்துள்ளது.
இந்த நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் அமுதா என்பவர் அந்த சமயத்தில் உண்மையிலேயே போலீஸ் அதிகாரிகள் இப்படி அந்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தினார்களா என அது குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பியுங்கள் என்று டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.