ஒரு காலகட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜி அதற்குப் பிறகு ரஜினி, கமல் அதன் பிறகு விஜய், அஜித் என தமிழ் சினிமாவில் இரு துருவ மோதல்கள் வலுவாக இருந்து வந்தன. இதில் எம்ஜிஆர், சிவாஜி காலத்திற்கு பிறகு தான் ரஜினி, கமல் வந்தார்கள். ஆனால் ரஜினி, கமல் காலகட்டத்திலேயே விஜய்யும் அஜித்தும் எதிரெதிர் துருவங்களாக மாறி விட்டனர்.
ஆனால் கடந்த சில வருடங்களாகவே நடிகர் கமல் படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தாமல் இருந்து வந்தார். அரசியல் கட்சியை துவங்கினார். இன்னொரு பக்கம் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்தார். இதனால் ரஜினி, கமல் என்கிற நிலை மாறி ரஜினி, விஜய் என்று சொல்லும் அளவிற்கு தமிழ் சினிமாவில் கமலின் பங்களிப்பு வெகு குறைவாகவே இருந்தது.
கிட்டத்தட்ட அவர் ரிட்டயர்ட் ஆகிவிட்டார் என்று சொல்லப்பட்ட நிலையில் தான் விக்ரம் படத்தின் வெற்றி மூலமாக மீண்டும் அவர் தான் இன்னும் வலுவாக தான் இருக்கிறேன் என்று நிரூபித்தார். அதை தொடர்ந்து இளம் நடிகர்களை விட அதிக படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
அந்த வகையில் ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்து வந்த இந்தியன் 2 திரைப்படமும் தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாக்கி வரும் கல்கி படமும் இதைத் தொடர்ந்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வரும் தக் லைப் படமும் இந்த 2024லிலேயே அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.
இப்படி கமலுக்கு ஒரே வருடத்தில் மூன்று படங்கள் வெளியாவது என்பது இந்த 35 வருடங்களில் இப்போதுதான் முதன்முறையாக நடக்கிறது என்பது ஒரு ஆச்சரியம் தான்.