நடிகர் ராமராஜன் எண்பதுகளின் இறுதியில் ரஜினி, கமலுக்கே சவால் விடும் விதமாக பல வெள்ளிவிழா படங்களில் நடித்தார். இவரது படங்களுக்கென இளையராஜா ஸ்பெஷலாக இசையமைப்பார் என்று சொல்வது போல பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் ஆகிவிடும். ஆனால் 90களில் இறுதியில் ராமராஜன் படங்களில் நடிப்பது குறைந்து போய் அரசியலிலும் அடி எடுத்து வைத்து விட்டார்.
அதன்பிறகு விபத்து ஒன்றில் சிக்கி அரசியல் சினிமா இரண்டையுமே விட்டு ஒதுங்கி இருந்தார். இந்த நிலையில் தற்போது பல வருடங்கள் கழித்து சாமானியன் என்கிற படத்தில் கதாநாயகனாகவே நடித்து வருகிறார் ராமராஜன். இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா தான் இசை அமைத்து வருகிறார். படத்தை ராகேஷ் குமார் என்பவர் இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இந்த படத்தின் கதையை நான் ஏன் ஒப்புக்கொண்டேன் என்று சமீபத்தில் கூறியுள்ள ராமராஜன், “இயக்குனர் இந்த படத்தின் கதையை சொன்னதும் கிளைமாக்ஸ் சூப்பரா இருக்கு என்று நான் சொன்னேன்.. சார் இது கிளைமாக்ஸ் இல்லை.. இதுதான் இன்டெர்வல் என்று அவர் சொன்னதும் அதிர்ந்து போனேன்.
இதுவே கிளைமாக்ஸ் போல இருந்தால் கிளைமாக்ஸ் எப்படி இருக்கும் என்று அவர் சொன்னதும் இன்னும் ஆச்சரியப்பட்டேன். தமிழ் சினிமாவில் இதுபோன்ற ஒரு இன்டர்வல் வந்ததே இல்லை என்பதால் உடனடியாக இந்த படத்தை ஒப்புக் கொண்டேன்” என்று கூறியுள்ளார்.