மும்பையில் தீவிரவாத கும்பல் ஒன்று தொடர்ந்து குண்டுவெடிப்பு நிகழ்த்துகிறது. இதனால் உஷாராகும் உளவுத்துறையினர்.. சென்னை உள்ளிட்ட பெருநகரங்கள் தான் தீவிரவாதிகளின் அடுத்த இலக்கு.. என தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்கள். இதனால் சென்னை நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்றுக்கொள் கொண்டுவரப்படுகிறது.
இந்த தருணத்தில் உறவுகள் இல்லாமல் சென்னையில் தனியாக வசிக்கும் வெற்றிவேல் (சந்தானம்) திருமணம் செய்து கொள்ள திட்டமிடுகிறார். பெண் வீட்டாரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் சொந்த வீடு, நல்ல வேலை.. என மணமகனுக்கு உரிய தகுதியை வளர்த்துக் கொள்கிறார். இதற்காக அவர் நண்பர் ஒருவரிடம் 25 லட்ச ரூபாய் கடன் வாங்கி, வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணப்பெண்ணிடமும் மற்றும் அவரது குடும்பத்தாரிடமும் ‘கடனை அடைத்தால் திருமணம் செய்து கொள்கிறேன்’ என வெற்றிவேல் நிபந்தனை விதிக்கிறார்.
இதனால் அவரது திருமணம் தாமதமாகிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் ரத்தினபுரி ஜமீனின் (தம்பி ராமையா) ஒரே பெண் வாரிசான தேன்மொழி( பிரியாலயா) யை கண்டதும் காதல் கொள்கிறார். ரத்தினபுரி ஜமீன் என்றதும் தன்னுடைய நிபந்தனை எளிதாக ஏற்றுக் கொள்ளப்படும்.. கடனிலிருந்து மீண்டு விடலாம்.. என நினைக்கும் சந்தானத்திற்கு.. தேன்மொழிவுடன் திருமணம் நடந்த பிறகு ரத்தினபுரி ஜமீன் பத்து. கோடி ரூபாய் கடனில் மூழ்கி இருக்கிறது என தெரிய வருகிறது. இதனால் மனைவி மீது ஆத்திரப்படும் வெற்றிவேல்.. தன் கடனை எப்படி அடைத்தார்? என்பதுதான் படத்தின் கதை.
சந்தானம் வழக்கம் போல் காமெடி நாயகனாக வலம் வந்தாலும், கலர்புல்லான ஆடைகள், அட்டகாசமான நடனம், காதல் பாடல் காட்சியில் நாயகியுடன் நெருக்கம் என்று கமர்ஷியல் நாயகனாக கவனம் ஈர்க்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பிரியலயாவுக்கு வழக்கமான கமர்ஷியல் நாயகி வேடம் என்றாலும் அதை நிறைவாக செய்திருப்பவர், நடனம் மற்றும் நகைச்சுவைக் காட்சிகளில் முத்திரை பதித்திருக்கிறார்.
தம்பி ராமையாவுக்கு படம் முழுவதும் வருகின்ற வேடம் என்பதால், வழக்கமான ஓவர் ஆக்டிங்கை விட சற்று கூடுதலாகவே நடித்திருந்தாலும், அது பல இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைக்கும்படி இருப்பது ஆறுதல்.
பாலசரவணன், விவேக் பிரசன்னா, முனிஷ்காந்த் ஆகியோருடன் சந்தானம் & கம்பெனி நடிகர்களான மாறன், சேசு, சுவாமிநாதன், கூல் சுரேஷ் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து கொஞ்சமாக சிரிக்க வைத்து, அதிகமாக கடுப்பேற்றுகிறார்கள்.
டி.இமானின் இசையில் பாடல்கள் அனைத்துமே ஏற்கனவே அவரது இசையில் வெளியான பாடல்கள் சாயல்களில் இருந்தாலும் கேட்கும் ரகமாக இருக்கிறது.
சந்தானம் பெண் பார்க்கத் தொடங்குவதில் இருந்து நகைச்சுவைக் காட்சிகளும் தொடங்கி கிச்சுகிச்சு மூட்டுகின்றன. சிரிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் லாஜிக்கை மீறி காட்சிகள் தறிகெட்டு ஓடுகின்றன. ஆனாலும் மொத்தத்தில் இந்த படம் வார இறுதியில் குடும்பத்தோடு சென்று சிரிக்கும் வகையில் இருக்கும் ஒரு படம் என்பதும், லாஜிக்கை மறந்துவிட்டு கவலையில்லாமல் இரண்டரை மணி நேரம் சிரிக்கலாம்