கடந்த சில நாட்களாகவே இசையமைப்பாளர் இளையராஜா தனது படங்களின் பாடல்களை இசையை வேறு படங்களிலோ பொது நிகழ்ச்சிகளிலோ அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என்றும் அப்படி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி அப்படி பயன்படுத்திய சில படங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற படத்தில் இளையராஜாவின் இசையில் உருவான குணா படத்தில் இருந்து கண்மணி அன்போடு என்கிற பாடலை படம் முழுவதும் பல இடங்களில் பயன்படுத்தி இருந்தனர். அந்த பாடலும் அந்த படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் ஆக அமைந்தது.
இந்த நிலையில் தான் அந்த பாடலை தன்னுடைய அனுமதி இன்றி பயன்படுத்தி உள்ளதாக படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதே சமயம் இது குறித்து படத்தின் தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறும்போது இந்த பாடலுக்கான இசை உரிமையை வைத்திருக்கும் இரண்டு நிறுவனங்களிடமிருந்து முறைப்படி இந்த அனுமதியை பெற்றுத்தான் நாங்கள் படமாக்கி உள்ளோம் என்று கூறுகின்றனர்.
இப்போது போல 90களில் பெரிய அளவில் காப்பிரைட் சட்டங்கள் இல்லை. அதனால் அப்போது இளையராஜா தனது படங்களின் பாடல் உரிமையை சில தனியார் நிறுவனங்களுக்கு விற்றிருந்தார். ஆனால் குறிப்பிட்ட காலம் முடிந்ததும் மீண்டும் அந்த உரிமை இளையராஜாவிற்கு வந்து விடும். அதே சமயம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் அந்த பாடல்களை பயன்படுத்தி வருவார்கள்.
அப்படிப்பட்ட நிலையில் தான் இது போன்று மஞ்சும்மேல் பாய்ஸ் குழுவினர் வேறு நிறுவனங்களிடமிருந்து இந்த பாடலுக்கான உரிமையை விலை கொடுத்து வாங்கி இருக்கின்றனர். அதே சமயம் இந்த படம் உருவான சமயத்திலோ அல்லது வெளியாகி வெற்றி பெற்ற பின்னரோ அவர்கள் இளையராஜாவின் நேரில் சந்திக்கவே இல்லை. ஒருவேளை அப்படி சந்தித்து இருந்தால் இளையராஜா பெருந்தன்மையாக இதன் உரிமையை விட்டுக் கொடுத்திருக்க கூட வாய்ப்பு உண்டு என்று சொல்லப்படுகிறது.