நடிகர் ராஜ்கிரண் என் ராசாவின் மனசிலே என்கிற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். அந்த படத்தை கஸ்தூரிராஜா இயக்கியிருந்தார். அதற்கு அடுத்தடுத்த படங்களை தானே இயக்கி நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார் ராஜ்கிரண். ஒரு காலகட்டத்தில் ரஜினியை விட ஒரு ரூபாய் சம்பளம் அதிகமாக கொடுங்கள் என்று கேட்டு வாங்கியவர்.
அதே சமயம் அவர் நடிக்க வருவதற்கு முன்பாக ஆரம்பத்தில் விநியோகஸ்தராக இருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக அறிமுகமான பைரவி படத்திற்கு கூட ராஜ்கிரண் விநியோகஸ்தராக பணம் தந்து உதவினார். அதன் பிறகு தயாரிப்பாளராகவும் மாறினார். அப்படி ராஜ்கிரண் சில படங்களை எடுத்து கடனில் சிக்கியுள்ளதாக நடிகர் ராமராஜனுக்கு அவரது நெருங்கிய நண்பரும் இயக்குனருமான டி கே போஸ் என்பவர் தகவல் சொன்னார்.
உடனே அவரது சிரமத்தை போக்குவதற்காக ராஜகிரண் தயாரிப்பில் ராசாவே உன்னை நம்பி என்கிற படத்தில் டி கே போஸ் இயக்கத்தில் நடித்துக் கொடுத்தார். ராமராஜன் வழக்கம்போல இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா தான் இசையமைத்திருந்தார். பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின.
இந்த படத்தில் சீதைக்கு ஒரு ராவணன் தான் தீக்குளிக்க தேதி வச்சான் என்கிற ஒரு பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்த பாடல். இந்த பாடலை பாடகர் மனோ பாடியிருந்தார். அதேசமயம் படத்தில் ராமராஜன் ஒரு சோக நிகழ்வில் சிக்கி இருக்கும் போது பின்னணியில் மரத்தடியில் இருக்கும் ஒரு பிச்சைக்காரன் இந்த பாடலை பாடுவது போன்று படமாக்கப்பட்டது.
அந்த பாடலை பாடி படத்தின் நடித்தவர் வேறு யாருமல்ல ராஜ்கிரண் தான். கதைப்படி அந்த பாடலை ராமராஜனே பாடி நடிப்பதாகத்தான் முதலில் முடிவு செய்யப்பட்டிருந்ததாம். ஆனால் ராஜ்கிரண் அந்த பாடலை நான் பாடி நடிக்கிறேன் என வேண்டுகோள் வைத்ததும் ராமராஜனும் பெருந்தன்மையாக சம்மதித்து விட்டாராம்.
அந்தப் பாடலை சரியாக பார்க்காதவர்கள் தற்போது மீண்டும் ஒரு முறை பார்த்தீர்கள் என்றால் இந்த உண்மை உங்களுக்கு நன்றாகவே புரியும். இந்த தகவலை தற்போது ராமராஜன் தான் நடித்துள்ள சாமானியன் படம் வெளியாகி உள்ள நிலையில் சமீபத்திய தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.