சமீப நாட்களாக புதிய படங்கள் வெளியானாலும் கூட பெரிய படங்களுக்கு மட்டுமே ரசிகர்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். சின்ன படங்களை ரசிகர்கள் கண்டு கொள்வதே இல்லை. அவர்களை ஈர்க்கும் விதமாக சின்ன படங்களும் இருப்பதில்லை. இதனால் தியேட்டர்காரர்கள் இதுபோன்ற சின்ன பட்ஜெட் படங்களை வெளியிடுவதற்கு தயங்குகிறார்கள்.
அப்படியே வெளியிட்டாலும் ஏதோ ஒரு காட்சியை மட்டும் ஒப்புக்கு திரையிட்டு ஒதுங்கி விடுகிறார்கள். அதே சமயம் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு ரஜினி, விஜய், அஜித், கமல் போன்றவர்கள் நடித்த படங்களை இப்போது ரிலீஸ் செய்தாலும் ரசிகர்கள் கூட்டம் படையெடுப்பதால் அப்படிப்பட்ட படங்களை ரீ ரிலீஸ் செய்து காசு பார்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் விஜய், திரிஷா நடித்த கில்லி திரைப்படம் வெளியாகி 20 வருடம் ஆனதை கொண்டாடும் விதமாக அந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது கிட்டத்தட்ட 50 நாட்களை தொடப்போகும் அந்த படம் 50 கோடியும் வசூலித்துள்ளதாம்.
அதேபோல அஜித் பிறந்தநாளுக்கு அவர் நடித்த ஒரு சில படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு அவையும் ஓரளவுக்கு வசூலித்தன. தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளாவிலும் விஜயின் கில்லி ரீ ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் தான் கேரளாவில் சூர்யா நடித்த கஜினி படத்தை வரும் ஜூன் 7ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம். கேரளாவில் விஜய்யை போலவே சூர்யாவுக்கும் அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றாலும் கில்லி படம் ரீ ரிலீஸ் ஆனது அந்த படத்தின் இருபதாவது வருடத்தை கொண்டாடுவதற்காக தான். அதேபோல மே 1 அஜித் பிறந்தநாள் என்பதால் அவரது படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன.
ஆனால் சூர்யாவின் பிறந்த நாளும் தற்போது இல்லை. கஜினி படத்தின் ரிலீஸ் தேதியும் கூட செப்டம்பரில் தான் வருகிறது/ அப்படி இருக்கையில் இப்போது திடீரென சம்மந்தம் இல்லாமல் கஜினி படத்தை ரிலீஸ் செய்வது ஏன் என்று விசாரித்தால் இப்போது இந்த படத்தை வெளியிட்டால் சரியாக வசூல் பார்க்கலாம் என்பதால் தான் இந்த முடிவு எடுத்திருக்கிறார்களாம்.