விடுதலை படத்தின் மூலம் தன்னை ஒரு கதையின் நாயகனாகவும் நிரூபித்தவர் சூரி. இந்தநிலையில் தற்போது இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் கருடன். இதில் ஹீரோவாகவும் அவர் சாதித்திருக்கிறாரா ? பார்க்கலாம்.
செல்லாயி அப்பத்தாவின் (வடிவுக்கரசி) பேரன் கருணா (உன்னி முகுந்தன்). அவரும், ஆதியும் (சசிகுமார்) சிறுவயது முதல் இணைபிரியாத உற்ற நண்பர்களாக இருந்து வருகிறார்கள். மேலும், அதே சிறுவயதில் தனக்கொரு பெயர் கூட இல்லாமல் அநாதையாக சுற்றித் திரிந்த சிறுவனை (சூரி), கருணா தன்னுடன் அழைத்து வந்து, அன்னமிட்டு அடைக்கலம் கொடுக்க, அச்சிறுவனுக்கு செல்லாயி அப்பத்தா ‘சொக்கன்’ என்று பெயர் வைக்க, அப்போது முதல் சொக்கன் கருணாவின் அதிதீவிர விசுவாசியாக அவரது வீட்டில் இருந்து வருகிறார்.
இந்தநிலையில் கோவிலின் பல கோடி சொத்துமதிப்புள்ள நிலத்தை சமுத்திரக்கனி உள்ளிட்ட சிலரின் ஆதரவுடன் ஆக்கிரமிக்க நினைக்கிறார் அமைச்சர் ஆர்.வி உதயகுமார். அதற்காக அந்த கோவிலுக்கு வைக்கப்பட்டுள்ள பட்டயம் ஒன்றை கைப்பற்ற நினைக்கிறார். ஆனால், அந்த வங்கி லாக்கர், கோயிலின் தர்மகர்த்தாவான வடிவுக்கரசி) பொறுப்பில் இருந்து வருகிறது.
மிகவும் ஒற்றுமையாக இருக்கும் ஆதி, கருணா, சொக்கன் ஆகிய இவர்களைத் தாண்டி தான் கோயில் நிலப் பட்டாவை வங்கி லாக்கரிலிருந்து எடுக்க வேண்டும் என்ற நிலையில் இதில் சூழ்நிலை காரணமாக உன்னி முகுந்தன் சசிகுமாருக்கு துரோகம் செய்ய முயற்சிக்க, சூரி விஸ்வாசத்திற்காக தனது முதலாளி பக்கம் நின்றாரா? அல்லது குடும்பத்தில் ஒருவராக உறவு பாராட்டி பாசம் காட்டிய சசிகுமாரின் நியாயம் பக்கம் நின்றாரா என்பது மீதிக்கதை.
சூரி ‘விசுவாசம்’ என்ற வார்த்தையின் உயிருள்ள உருவகமாக இந்த அதிரடி நாடகத்தின் மூலம் பார்வையாளர்களை பிரமிக்க வைத்து ஒரு அற்புதமான நடிகராக வெளிப்படுகிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில் மொத்த படத்தையும் தன் தோள் மீது சுமந்திருக்கிறார் சூரி.
வழக்கம்போல நண்பேன்டா என்கிற விதமாக சசிகுமார் அழுத்தமான நடிப்புடன் தனித்து நிற்கிறார். உன்னிமுகுந்தன் நட்பு, பாசம், துரோகம் என அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகிய மூவருக்கும் திரை பிரவேசத்தை சமமாக பகிர்ந்து அசத்தியிருக்கிறார்கள்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சமுத்திரக்கனியின் திரை தோற்றம் மற்றும் நடிப்பு திரைக்கதையோட்டத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.ஆதியின் மனைவி தமிழ் செல்வியாக ஈர்க்கக்கூடிய கதாபாத்திரத்தில் ஷிவதா தேவையான நடிப்பை வழங்கி கதைக்கு உயிரோட்டத்தை அளித்திருக்கிறார். செல்லாயி அப்பத்தாவாக வரும் வடிவுக்கரசி, கருணாவின் மனைவி அங்கயற்கண்ணியாக வரும் ரோஷினி, பர்வினாக வரும் பிரிகிடா உள்ளிட்ட பலரும் சிறந்த நடிப்பை வழங்கி இருக்கின்றனர்.
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை காட்சிகளை மக்கள் மனதில் நிற்க வைத்துவிடுகிறது. ஆர்தர் ஏ.வில்சனின் அனுபவம் மிக்க ஒளிப்பதிவும், பிரதீப் இ.ராகவின் உறுத்தல் இல்லாத படத்தொகுப்பும் இயக்குநரின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கின்றன.
கிராமத்து மனிதர்களை உலவவிட்டு அவர்களுக்குள் நடக்கும் நட்பு, துரோகம், பாசம், காதல் என்ற உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியதன் மூலம் கவனத்தை ஈர்க்கிறார் இயக்குநர் துரை செந்தில்குமார்.
கருடன் – விசுவாசம்