பல மெகா தொடர்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய பாஸ்கர் சக்தி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ரயில் தென் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் குடியை மட்டுமே நம்பி குடித்துக் கொண்டு வேலை வெட்டிக்கு செல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகன் ஒரு பக்கம். வடக்கத்திலிருந்து வந்து இங்கு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றும் ஒரு வட மாநில வாலிபன் இன்னொரு பக்கம். இந்த இருவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைத்து இருக்கிறார் பாஸ்கர் சக்தி.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நாயகன் குங்குமராஜ் எலக்ட்ரிக் வேலை செய்து வந்தாலும், மது பழக்கத்திற்கு அடிமையானதால் சரியாக வேலைக்கு செல்லாமல் எந்த நேரமும் மது குடிப்பதிலேயே நாட்டம் கொண்டிருக்கிறார். இதனால், அவரது மனைவி வைரமாலாவுக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் நாயகனை மதிப்பதில்லை. இதனால் விரக்தியில் இருக்கும் நாயகன் தன் கோபத்தை, தன் வீட்டின் எதிரே குடியிருக்கும் வட மாநில வாலிபர் பர்வேஸ் மெஹ்ரூ மீது காட்டுகிறார். ஆனால், அவரது மனைவி வைரமாலா, வட மாநில வாலிபரை தனது சொந்த தம்பியாக நினைத்து பழகுகிறார்.
தனது சொந்த ஊருக்கு போகும் சூழலில், பர்வேஸ் வைரமாலாவிடம் ஒரு பையை கொடுக்கிறார். அதை திரும்ப வாங்குவதற்குள் அவர் திடீரென்று மரணமடைய, அவரது இறுதி சடங்கிற்காக அவரது மனைவி, குழந்தை, தந்தை ஆகியோர் தேனி வருகிறார்கள். இறுதிச் சடங்கு முடிந்த பிறகு பர்வேஸ் வைத்திருந்த பணம் பற்றி அவரது குடும்பத்தார் கேட்கிறார்கள். அப்போது தான் வைரமாலாவுகு பர்வேஸ் தன்னிடம் கொடுத்த பை நினைவு வருகிறது. அதை அவர் எடுக்க செல்லும் போது அந்த பை அங்கு இல்லாததால் அதிர்ச்சியடைகிறார். அந்த பை என்ன ஆனது?, பர்வேஸ் குடும்பத்திற்காக வைரமாலா என்ன செய்தார்? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
படத்தில் நடித்திருக்கும் நடிகர்களில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் வைரமாலா முதன்மையான இடத்தை பெறுகிறார். கதையின் நாயகனான குங்கும ராஜ் கூத்துப்பட்டறையின் தயாரிப்பு என்றாலும்.. அவருடைய கதாபாத்திரத்தின் தோற்றம் குறித்து இயக்குநர் தெளிவாக எழுத்தில் கொண்டு வராததால் பல இடங்களில் அவருடைய நடிப்பு வீணாகி இருக்கிறது. ஏனையோர் அனைவரும் இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை செய்திருக்கிறார்கள்.
எஸ். ஜே. ஜனனியின் இசையில் பாடல்களை விட பின்னணி இசை பரவாயில்லை.
ஒரு தமிழன் ஒரு தமிழனை மட்டப்படுத்தி வட மாநில வாலிபனை தூக்கி வைத்து வந்திருக்கும் படம் தமிழன் என்றாலும் சரி வட மாநிலத்தவன் என்றாலும் சரி சோம்பேறிகள் உழைப்பாளிகள் என இரு பிரிவினர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் தமிழன் மட்டுமே குடிகாரன் வட மாநிலத்தவன் பிழைக்க வந்தவன் என்பது போல் திரைக்கதை அமைத்திருக்கும் பாஸ்கர் சக்திக்கு நம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.