டீன் ஏஜில் இருக்கும் 13 பேருடன் பார்த்திபன் களம் இறங்கி கதை திரைக்கதை அமைத்து வெளிவந்திருக்கும் படம் டீன்ஸ். நடுத்தர வர்க்கத்தின் குடும்பத்துப் பிள்ளைகள் ஒரே வகுப்பில் படிக்கும் ஒரு 13 பெயர்களில் ஒருவர் தன் பாட்டி ஊரில் பேய் இருப்பதாக சொல்ல அதைப் பார்ப்பதற்காக 13 பேரும் பள்ளிக்கு கட்டடித்துவிட்டு ஊரை நோக்கி செல்ல நடுவழியில் கலவரம் என்பதால் பஸ் போக முடியாமல் இருக்க சரி என்று நடந்து போகலாம் என்று முடிவு எடுத்து அனைவரும் வெட்ட வெளியில் செல்லும்போது ஒவ்வொருவராக நான்கு பேர் காணாமல் போகின்றனர்.
அவர்களைத் தேடி மற்றவர்கள் அலையும்போது இயக்குனர் பார்த்திபன் ஒரு அதிசயத்தை கண்டுவர அவரிடம் உதவி கேட்கின்றனர் மாணவர்கள். அவர்களுக்கு உதவி செய்யும் பார்த்திபன் ஓர் அதிர்ச்சியான விஷயத்தை கூற மாணவர்கள் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். அது என்ன படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
பத்துக்கும் மேற்பட்ட கதையின் நாயகர்களான வளரிளம் பருவத்தை சேர்ந்த நடிகர்களை… பாடல் ஒன்றின் மூலம் தொடக்கத்திலேயே அறிமுகப்படுத்தும் பாணி- பார்த்திபனின் டச். ஆனால் அவர்கள் பேசிக்கொள்ளும் வசனங்களில் நாடகத் தனமும், மிகைத்தனமும் அப்பட்டமாக தெரிகிறது. அதிலும் குறிப்பாக பானைகளில் இருக்கும் கள்ளை பாடசாலையில் பயிலும் மாணவ மாணவிகள் அருந்துவது .. பார்த்திபனின் சமூகப் பொறுப்புணர்வு எங்கே? என கேள்வி கேட்க வைக்கிறது. ஆனால் சமூக வலைதள பக்கத்தில் வளர் இளம் பருவத்தை சேர்ந்த பாடசாலையில் பயிலும் மாணவ மாணவிகள் பீர் அருந்தும் காணொளிகள் வெளியாகி இருப்பதால்… அவை சம காலகட்டத்திய மாணவ மாணவிகளின் பொது வெளி சமூக நடவடிக்கையின் வெளிப்பாடு என்றும் எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும் பார்த்திபன் இதனை கவனமாக தவிர்த்திருக்க வேண்டும்.
தங்களுடன் வரும் நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக மாயமாக மறைவதும்.. அது ஏன்? எப்படி? என்று புரியாமல் மற்றவர்கள் தவிப்பதும், தாங்களாவது உயிருடன் பயணத்தை தொடர்வோமா? தொடர மாட்டோமா? என்ற குழப்பம் அவர்களிடத்தில் ஏற்படுவதும் சுவராசியமானது. ஆனால் குறைவான கற்பனை திறன் மற்றும் காட்சி மொழியின் காரணமாக ரசிகர்களின் மனதில் இவை எரிச்சலை ஏற்படுத்துகிறது. இருப்பினும் முதல் பாதியின் நிறைவு காட்சியில் பார்வையாளர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்துகிறார் இயக்குநர்.
இரண்டாம் பாதி தொடங்கியவுடன் வானியல் இயற்பியல் விஞ்ஞானியான பார்த்திபனின் கதாபாத்திரம் அறிமுகமாகி, தொலைந்த நண்பர்களின் பின்னணியை அறிவியல் ஆதாரத்துடன் ஏனைய மாணவ மாணவர்களுக்கு எடுத்துரைக்கிறார். அத்துடன் வேற்றுக்கிரக வாசிகளால் ஏவப்பட்டு பூமியில் வந்து இறங்கி இருக்கும் அந்த விண்கலம் – மனிதர்களில் ஒருவரை ஆய்வுக்காக கேட்பதும்.. அதற்கு நண்பர்களின் பதிலும்தான் படத்தின் முத்தாய்ப்பான உச்சகட்ட காட்சி.
முதல் பாதியை விட இரண்டாம் பாதி பரவாயில்லை என்றாலும், அது பாமர ரசிகர்களுக்கு புரியும்படி இல்லை என்பதுதான் பெரிய குறை. மாணவ மாணவிகளிடையே.. அமானுஷ்யம் குறித்தும், பேய் குறித்தும், அறிவியல் ரீதியான விழிப்புணர்வு தேவை என்பதை வலியுறுத்த விரும்பிருக்கும் பார்த்திபன்.. அதனை மாணவர்களாலேயே உணரப்பட்டு தெளிவு பெற வைக்காமல்.. இவரே ஒரு கதாபாத்திரமாக தோன்றி, அவர்களை வழிநடத்தி இருப்பது தான் படத்தின் பலம் மற்றும் பலவீனம்