விக்ரம், பூ பார்வதி, மாளவிகா, பசுபதி, மற்றும் பல நடிக்க பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தங்கலான் . கதை எப்படி ஆரம்பிப்பது என்பதே தெரியவில்லை. எப்படியும் ஆரம்பித்து தான் ஆக வேண்டும்.
விக்ரம் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்து தன் நிலத்தை தானே உழுது அறுவடை செய்து அதைப் போரடித்து நெற்கதிர் எடுக்கும் நேரத்தில் வஞ்சகர்களின் சூழ்ச்சியால் தீக்கு இறையாக, வரி கட்ட முடியாததால் நிலத்தை பறித்த மிராசுதார் கப்பம் கட்ட வேண்டிய பணத்திற்கு தன் பண்ணையில் கூலி வேலை செய்ய நிர்பந்திக்க வேற வழியில்லாமல் கூலி வேலை செய்கிறான் தங்கலான்.
இது ஒரு புறம் இருக்க அங்கே காடுகளிலும் மலைகளிலும் தங்கம் கிடைப்பதாக அறிந்த வெள்ளைக்காரன் தங்கத்தைத் தேடி எடுப்பதற்கு விக்ரமிடம் பங்கு தருவதாக பேரம் பேசி அழைத்து செல்ல தங்கம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அதை வெட்டி எடுக்க ஆள் பற்றாக்குறையால் தன் மக்களை அழைத்துச் செல்கிறார் விக்ரம். பிறகு நடந்தது என்ன ? தங்கம் கிடைத்ததா ? விக்ரமின் பங்கு கிடைத்ததா என்பதை மீதிக்கதை.
பா ரஞ்சித் படம் என்றால் நிச்சயமாக அரசியலும் ஜாதியும் கண்டிப்பாக இருக்கும். இந்த படத்தில் அது கொஞ்சம் மேலோங்கி இருக்கிறது. உலக நாயகனுக்கு போட்டி என்றால் அது நிச்சயமாக விக்ரம் மட்டுமே முடியும். இந்தப் படத்தில் விக்ரமின் மெனக்கிடல் மிக அதிகம். உடல் மொழி முதல் வசனம் மொழி வரை விக்ரம் தன் திறமையை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.
பண்டைய கால அடிமைகளின் தமிழ் மொழியை மிக அழகாக உச்சரிப்பதில் விக்ரம் பண்டைய காலத்துக்கே சென்று விட்டார். முன்னெற்றியில் முடி வலித்தல், பின் தலையில் குடுமி, முகத்தில் தாடி என ஒப்பனைக் கலைஞர் விக்ரமை மிக அழகாக செதுக்கியிருக்கிறார். மனைவியிடம் கொஞ்சுவது முதல் குழந்தைகளை அரவணைப்பது வரை ஒரு பழங்குடி இனத்தவரை போல் வாழ்ந்து காட்டி இருக்கிறார் விக்ரம். தேசிய விருதுக்கு இந்த வருடம் விக்ரம் பெயர் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
பூ பார்வதி விக்ரமுக்கு மனைவி. நடிப்பில் அவரையே மிஞ்சிய நாயகி. முக பாவங்களும் உடல் மொழிகளும் அட அட அட.. பார்வதிக்கு இணை பார்வதியே.
மேலாடை அணியாமல் வாழும் பழங்குடி இனத்தில் முதல்முறையாக மேலாடையான ஜாக்கெட்டை அவர் போட்டு அழகு பார்ப்பது தனி அழகு. தேசிய விருதுக்கு இவர் பெயரும் இடம்பெறும் என்பதில் நமக்கு ஐயமில்லை.
மாளவிகா சூனியக்காரி.. வித்தியாசமான மேக்கப்பில் வித்தியாசமான கணீர் குரலில் கத்தி கத்தி பேசுவது ஆணுக்கு இணையான வில்லி இறுதியில் நாயகி அந்தஸ்தை பெற்று விடுகிறார்.
இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் இடத்தில் பசுபதி. தன் தனித்திறமையால் தன்னை கவனிக்கப்பட வைக்கிறார்.
படத்திற்கு மேக்கப் போட்டவர்களை நிச்சயமாக பாராட்டியே ஆக வேண்டும். அதேபோல் ஆடை வடிவமைப்பாளர் அவரையும் பாராட்டியே ஆக வேண்டும். இவர்களை எல்லாம் விட கலை இயக்குனர் நம்மை அந்த காலகட்டத்திற்கு கொண்டு சென்று விட்டார்.
இசை ஜிவி பிரகாஷ். இரண்டு பாடல்கள் மீண்டும் கேட்க தூண்டும் வகையில் இசையை தவழ விட்டிருக்கிறார். வெறித்தனமாகவும் இசைத்திருக்கிறார். படத்தின் வெற்றியில் 30 சதவீதம் இவரையே சேரும்.
இயக்குனர் பக்கம் வருவோம். கன்னடத்தில் வெற்றி பெற்ற கேஜிஎப் படத்தை போல் தமிழில் எடுக்க வேண்டுமென்று எண்ணத்தில் அதற்கான கதையை எழுதி திரைக்கதை வடிவமைத்து அழகாக இயக்கி இருக்கிறார். ஆனால் தன் ஜாதிய சாடல்களையும் மேற்கத்திய வர்க்கத்தை வசை பாடுவதிலும் எந்தப் படத்திலும் குறை வைக்காத பா ரஞ்சித் இந்தப் படத்தில் மிக அதிகமாக சாடி இருக்கிறார். தயாரிப்பாளர் ஞானவேல் ராசாஜாவுக்கு தங்கலான் படம் இந்த வருடத்தின் ஜாக்பாட்.
தங்கலான் -தங்க முட்டையிடும் விக்ரம்