கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் மற்றும் பலர் நடிப்பில் 2d தயாரிப்பில் 96 புகழ் பிரேம்குமார் இயக்கத்தில் நாளை வெளிவர இருக்கும் படம் மெய்யழகன்.
படத்தின் டைட்டிலை பார்த்தவுடன் மெய்யழகன் யார் என்று தெரிந்திருக்கும். சரி கதை களத்திற்கு வருவோம்.
சிறுவயதில் தஞ்சாவூரில் நீடாமங்கலத்தில் சொத்து விஷயத்தில் மனக்கசப்பு ஏற்பட்டு சென்னைக்கு வருகின்றனர் அரவிந்த்சாமி குடும்பத்தினர். பல வருடங்களுக்கு பிறகு தனது சித்தப்பாவின் மகள் திருமணத்திற்கு சொந்த ஊருக்கு வருகை தரும் அரவிந்த்சாமி இரவு பஸ்சை தவறவிட்டு நாயகன் கார்த்தி வீட்டில் ஓர் இரவு தங்க அங்கு நடக்கும் சம்பவங்களின் கோர்வையின் திரைக்கதையே மெய்யழகன் படத்தின் கதை.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு மனித உள் உணர்வுகளின் வெளிப்பாடுகள் வெளிவராமல் உள் அடங்கியே வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனுக்குள் தன்னைத் தான் என்று தெரியப்படுத்திக் கொள்ள இன்னொருவன் தேவைப்படுகிறான் என்பதை அழகாக மக்கள் ரசிக்கும் வண்ணம் தந்திருக்கும் இயக்குனர் பிரேம்குமாருக்கு வாழ்த்துக்கள்.
படத்திற்கு நாயகன் கார்த்தி தான் என்றாலும் அவருக்கு சரிசமமாக இணை நாயகனாக அரவிந்த்சாமி களம் இறங்கி இருக்கிறார்.
கார்த்தி.. இவரின் நடிப்பு பல படங்களில் நாம் ரசித்துப் பார்த்திருந்தாலும் இந்த மெய்யழகனில் இவரின் அலப்பறை இவரைப்போல் உறவு நமக்கு ஒருவர் இல்லையே என்று படம் பார்க்கும் நம்மை ஏங்க வைக்கிறார்.
அத்தான் அத்தான் என்று அரவிந்த் சாமியை சுற்றி இவர் செய்யும் அலப்பறை அட அட.. கார்த்திக்கு கார்த்தி தான் போட்டியே
தன்னை சிறுவயதில் கைப்பிடித்து அழைத்துச் சென்ற சொந்தம் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கும்போது அதை எப்படி வெளிப்படுத்துவது என்பது தெரியாமல் அன்பு மழையில் நனைய விடுகிறார் கார்த்தி. படம் முழுக்க வார்த்தை ஜாலங்களால் நம்மை வசப்படுத்தி விடுகிறார்.
படத்தில் காதல் இல்லை என்றாலும் மனைவிக்காக அவள் வசித்த வீட்டையே வாங்கித் தந்து மனைவியை காதலிக்கிறார். கார்த்தியின் திரை வாழ்க்கையில் மெய்யழகன் அவருக்கு ஒரு மணி மகுடம்.
அரவிந்த்சாமி கார்த்தி யார் என்று தெரியாமல் தெரிந்தது போல் காட்டிக் கொண்டு அவர் கூடவே பயணிக்கும் கதாபாத்திரம். முதலில் கார்த்தி மேல் எரிச்சல் பட்டாலும் கார்த்தியின் அன்பின் உபசரிப்பில் கண்கலங்கி விடுகிறார். கார்த்தி பக்கம் பக்கமாக வசனம் பேசினாலும் அதை தன் பார்வையினால் பதில் சொல்லி சில இடங்களில் கண்கலங்கி நம்மையும் கண் கலங்க வைக்கிறார். திருமணத்தில் தன் தங்கைக்கு பரிசளித்த நகைகளை அணிவித்து கண் கலங்கும் அரவிந்த்சாமிக்கு இந்த படம் அவருக்கு ஒரு புதிய பரிமாணம்.
கார்த்தி மனைவியாக ஸ்ரீ தவ்யா. அரவிந்த் சாமி மனைவியாக தேவதர்ஷினி மற்றும் ஜெயப்பிரகாஷ், ராஜ்கிரண் அனைவரும் தங்கள் இயல்பான நடிப்பின் மூலம் படத்திற்கு பலம் சேர்க்கின்றனர்.
மெய்யழகன்
உறவுகளின் மனக்கசப்பால் உறவுகளை விட்டு நாம் ஒதுங்கி சென்றாலும் உறவுகள் என்றும் நம் உறவுகள் தான். காலங்கள் கசப்புகளை மாற்றிவிடும். ஆனால் நாம் மாறாமல் இருந்துவிடக் கூடாது என்பதை மிக அழுத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். அது மட்டும் இல்லை. கரிகாலச் சோழனின் வீரத்தைச் சொல்லி அந்த வீர பரம்பரையில் வந்த நாம் வீர தமிழர்கள். ஆனால் அந்த வீரத்தை அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு உதாரணம் துப்பாக்கி சூட்டில் பலியான தமிழனுக்காக நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதே சாட்சி என்று சொல்லாமல் சொல்கிறார் இயக்குனர்.
அது மட்டும் அல்ல குலதெய்வத்தின் பெருமை, ஜல்லிக்கட்டின் பெருமை என தமிழனை மெய்யழகன் படத்தின் மூலம் தலைநிமிரச் செய்கிறார்
மெய்யழகன் — உறவுகளின் அழகன்