நல்ல கதையம்சம் கொண்ட படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் ஜீவி புகழ் வெற்றி நடித்துள்ள படம் தான் ஆலன். மேற்குத் தொடர்ச்சி மலை கிராமம் ஒன்றில் வசிப்பவர் வெற்றி. இவருக்கு புத்தகங்களை வாசிப்பதும், எழுதுவதும் பிடிக்கும். இவரது தாத்தாவின் ஊக்கத்தால் எழுதத் தொடங்குகிறார்.
ஒரு கட்டத்தில் விபத்தில் தனது பெற்றோரை இழக்கிறார். அந்த அதிர்ச்சியில் அவர் இலக்கில்லாமல் பயணித்து காசியை வந்தடைகிறார். காசியில் வசிக்கும் சாமியார் ஹரீஷ் பெராடி வெற்றிக்கு ஆதரவு கரம் நீட்டுகிறார். பத்து ஆண்டுகளாக இந்த குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகி பற்றற்ற நிலையில் வாழ்வதற்கான பயிற்சியிலும் ஈடுபடுகிறார்.
ஆனால் அவரால் முழுமையான துறவியாக முடியவில்லை. இதனை உணர்ந்த சாமியார் இந்த உலகத்தை வலம் வந்து கிடைக்கும் அனுபவத்தை எழுத்தால் எழுது. அதன் பிறகு தான் உன் மனம் ஒரு முகப்படும். அதன் பிறகு என்னிடம் வா’ என அவரை அனுப்பி விடுகிறார்.
அவர் அங்கிருந்து புறப்படும் போது ஒரு புகையிரத பயணத்தில் ஜெர்மனியிலிருந்து இந்தியாவிற்கு சுற்றுலா பயணியாக வருகை தந்திருக்கும் ஜனனி தாமஸ் எனும் இளம் பெண்ணைச் சந்திக்கிறார். அவர்களின் சந்திப்பு பேச்சு காதலாக மாறுகிறது. ஆனால் எதிர்பாராத விதமாக அவள் காமுகர்களின் பாலியல் தொல்லைக்கு ஆளாகி உயிரிழக்கிறார். இதனால் மீண்டும் வாழ்க்கையில் வெறுமையை சந்திக்கிறார் வெற்றி, அதன்பின் நடக்கும் விஷயங்கள் தான் மீதி கதை.
தியாகுவாக நடித்திருக்கும் நடிகர் வெற்றி , அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் தன்னாலான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
வெற்றியின் வாழ்க்கையில் குறுக்கிடும் மதுரா மற்றும் அனு சித்தாரா ஆகிய இரண்டு பேரின் நடிப்பும் மிகச்சிறப்பு. அதிலும் மதுரா பர்ஸ்ட் மார்க் வாங்குகிறார்.
காசி, ராமேஸ்வரம், ரிஷிகேஷ் பல ஊர்களையும் மனதில் பதிய வைக்கிறது விந்தன் ஸ்டாலின் கேமரா. அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா தன் இசைத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவனிக்க வைக்கிறார்.
எழுத்தும், காதல், ஆன்மீகம் ஆகியவை படத்தின் மிக முக்கிய அம்சங்களாக வைத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் சிவா.ஆர் அதற்கான திரைக்கதையை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யப்படுத்தி இருக்கலாம். மொத்தத்தில் சன்னியாசம் மற்றும் எழுத்து இரண்டையும் கலந்து ஒரு கலவையாக இருந்திருக்கும் படம் தான் இந்த ஆலன்