சாதியை உயர்த்தி பிடித்துக்கொண்டு சமீப காலமாக அதிக படங்கள் வருவது வாடிக்கையாகி விட்டது. அதேசமயம் சிலர் அதில் மெசேஜ் சொல்கிறேன் என்று நடுநிலை கோட்டில் பயணிக்க முயற்சிப்பார்கள். அப்படி ஒரு இயக்குனராக நடிகர் போஸ் வெங்கட் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். கன்னிமாடம் படத்திற்கு பிறகு அவர் இயக்கியுள்ள இரண்டாவது படம் இது. முதல் படத்தில் ஆனவக்கொலை தவறு என்றவர் இதில் சொல்கிறார் பார்க்கலாம்.
பல வருடங்களுக்கு முன்பே ஒடுக்கப்பட்டவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என நினைக்கும் விமலின் தாத்தா ஒரு ஆரம்பப் பள்ளியை துவக்குகிறார். அவரது மகன் சரவணன் தந்தை பாணியிலேயே ஆசிரியராக ஆகி அதை நடுநிலைப் பள்ளியாக மாற்றுகிறார். மகன் விமலையும் ஆசிரியருக்கே படிக்க வைத்து எப்படியாவது உயர்நிலைப் பள்ளியாக மாற்ற வேண்டும் என லட்சியத்தை விதைக்கிறார்.
விமலும் தந்தையின் லட்சியத்திற்காக முயற்சியில் இறங்க அங்கே ஜாதி குறுக்கே வந்து நிற்கிறது. மற்ற ஜாதியினர் படித்து பெரிய ஆட்களாக மாறுவதை விரும்பாத ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த சிலர் கடவுளின் பெயரைச் சொல்லி அந்த பள்ளியை இடிக்க முயற்சிக்கின்றனர். இதற்கு எதிரான போராட்டத்தில் விமல் இறங்குகிறார்.. வெற்றி யாருக்கு கிடைத்தது என்பது மீதி கதை.
ஏற்கனவே வாகை சூடவா படத்தில் நாம் பார்த்திருந்தாலும் இந்தப்படத்திலும் ஆசிரியர் வேடத்திற்கு பொருத்தமான நடிகர், என்று பெயர் வாங்கும் அளவுக்கு விமல், ஆசிரியர் வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.இந்தப்படத்தின் மூலம் விமல் தன்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக்கொண்டுள்ளார்.
நாயகி சாயா தேவி, கண்களால் அனைவரையும் வெகுவாகவே கவர்ந்திருக்கிறார். காதல் காட்சிகளில் ரசனையை அள்ளித் தெளித்திருக்கிறார்.
வில்லத்தனம், நக்கல் நையாண்டி இல்லாத ஒரு புது நடிப்பில் சித்தப்பு சரவணன் விமலின் தந்தையாக நடித்திருக்கிறார்.கும். குறிப்பாக கல்வியைப் பற்றி கூறும் ஒவ்வொரு இடத்திலும் நடிப்பில் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறார்.
நாயகனின் நண்பராக வலம் வந்தாலும், சாதி வெறியால் தனது முன்னோர்கள் செய்த நயவஞ்சகத்தின் மூலம் நண்பர்களை கொல்ல துடிக்கும் வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் சிராஜ், புதுமுக நடிகர் என்ற சுவடு தெரியாமல் நடித்திருக்கிறார். இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் உண்டு.
ரமா, ஜெயபாலன், கஜராஜ், சரவண சக்தி, விஜய் முருகன், ப்ரனா, எலிசபெத் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுக்கப்பட்ட வேலையை குறையில்லாமல் செய்து திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் விதமாக பயணித்திருக்கிறார்கள்.
1980 காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் சென்றதில் ஒளிப்பதிவாளரின் பங்கு பெரிதாக இருக்கிறது. சித்து குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியாக இருப்பதோடு, பாடல் வரிகள் புரியும்படியும், கவனம் ஈர்க்கும் வகையிலும் அமைந்திருக்கிறது.
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லும் பள்ளிக்கூடத்தில் ஜாதிக்காக பள்ளிக்கூடத்தை இடிக்கும் உயர் ஜாதி குடும்பத்தின் ஜாதி வெறியை கலந்து தாழ்த்தப்பட்டவர்களின் இயலாமையை தான் எடுத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் போஸ் வெங்கட்.