நாயகன் விக்ராந்த்தும் அப்படி ஒரு கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இருப்பதைக் கொண்டு சிக்கனமாக குடும்பம் நடத்தும் மனைவி ரித்விகா. அழகான ஒரு மகன். தீபாவளி நெருங்கும் சமயத்தில் இதே போல தீபாவளி போனஸை எதிர்பார்த்து காத்திருக்கிறார் விக்ராந்த்.
கடைசி நேரத்தில் போனஸ் கிடைக்காமல் போகவே, குடும்பத்தின் தீபாவளி கனவுகளை நிறைவேற்றுவதற்காக வேறு சில வழிகளில் இறங்குகிறார் விக்ராந்த். ஆனால் அதுவே அவரை தேவையில்லாத சிக்கல்களில் மாட்டி விடுகிறது.. அதிலிருந்து மீண்டு குடும்பத்துடன் தீபாவளியை சந்தோஷமாக அவரால் கொண்டாட முடிந்ததா ? என்பது மீதி கதை.
வருடம் முழுவதும் உழைத்துக் கொண்டிருந்தாலும், வறுமை நிலை மாறாமல் இருக்கும் எளிய மக்கள் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் கூட தங்களது சிறு சிறு ஆசைகளை நிறைவேற்றுவதற்காக எத்தகைய போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது, என்பதை நேர்த்தியாக மட்டும் இன்றி பார்வையாளர்களின் மனதுக்கு நெருக்கமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஜெயபால்.ஜெ.
நாயகனாக நடித்திருக்கும் விக்ராந்த், தனது உரிமையை கூட சத்தமாக கேட்காத சாதுவான கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். தன் பிள்ளை ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுக்க முடியாத தனது இயலாமையை நினைத்து அவர் கலங்கும் காட்சிகளில் நம்மையும் கண்கலங்க வைத்து விடுகிறார்.
வீட்டு வேலை செய்யும் பெண்ணாக ரித்விகா கணவனின் இயலாத நிலையை உணர்ந்து அதற்கேற்றவாறு குடும்பத்தை அரவணைத்துச் செல்லும் அன்பான மனைவியாக, மகன், கணவன் என்று அவர்களின் சந்தோஷத்திற்காக வாழ்வதும், வேலை செய்யும் இடத்தில் அவமானப்பட்டாலும், அதை கண்டு கொள்ளாமல் தன் வேலையை முடித்து விட்டு செல்லும் இடத்திலும், கணவனை காணாமல் பரிதவிப்பது என்று தன் இயல்பான நடிப்பால் கவர்கிறார்.
சிறுவனாக நடித்திருக்கும் ஹரீஷும் இவர்களுக்கு ஈடுகொடுத்திருப்பது வியப்பு.
பாடல்களும், பின்னணி இசையும் காட்சிகளின் வழியே நன்கு பயணிக்கும் வகையில் மரிய ஜெரால்டின் இசை அமைந்துள்ளது.எளியமான முறையில் வாழ்க்கை பயணத்தினை கடக்கும் மக்களின் வாழ்வியலை ஒளிப்பதிவாளர் கெளதம் சேதுராமன் நன்கு பதிவு செய்துள்ளார்.
பண்டிகை என்றால் பணத்தை ஏற்பாடு செய்ய ஏழ்மை நிலையில் இருக்கும் பெற்றோர்கள் எடுக்கும் முயற்சிகள், பரிதவிப்பு, மனதளவு பாதிப்புகள், அவமானங்கள் அதையெல்லாம் பிள்ளைகளின் மகிழ்ச்சி முன்னால் எதுவுமில்லை என்பதை சொல்லியிருந்தாலும் ஏழ்மையில் இருப்பவர்களுக்கு தீபாவளியை கொண்டாடுவது என்பது அவ்வளது எளிதான விஷயம் இல்லை என்பதையும் இப்படத்தின் மூலம் உணர வைத்திருக்கிறார் இயக்குனர்.