spot_img
HomeNewsவிமர்சனம் என்கிற பெயரில் வன்மத்தை விதைத்தல் தவறு ; திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள்

விமர்சனம் என்கிற பெயரில் வன்மத்தை விதைத்தல் தவறு ; திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள்

திரைப்பட விமர்சனம் என்கிற பெயரில் தனிமனித தாக்குதல் மற்றும் வன்மத்தை விதைத்தல் – நமது சங்கத்தின் கண்டனம்

திரைப்படங்களின் நிறை குறைகளை விமர்சிக்க அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால் அது திரைப்படத்தை பற்றி மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், கதாநாயகன் மீது தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவர்கள் மீது இருக்கும் வன்மத்தை பொதுவெளியில் கக்க ஒரு கருவியாக, திரைப்பட விமர்சனத்தை சில ஊடகங்கள் சமீப காலங்களில் பயன்படுத்தி வருவதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

திரைத்துறை விமர்சகர்கள் தராசு போல ஒரு திரைப்படத்தின் நிறை குறைகளை சொல்லி, மொத்தத்தில் தங்களின் அபிப்பிராயத்தை சொல்லலாமே தவிர, அதை ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் விதத்தில் கடுமையாக விமர்சனம் செய்து, தனிமனித தாக்குதல்களும் செய்வது, திரைப்பட துறையை மொத்தமாக அழிக்கும் செயலாக நமது சங்கம் கருதுகிறது. அவ்வாறு செய்து வரும் ஊடகவியலாளர்கள் மீது தனது கண்டனத்தை நமது சங்கம் தெரிவிக்கிறது.

ஒரு திரைப்படத்தை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும். விமர்சகர்கள் தங்களின் கருத்துக்களை அனைவரின் கருத்தாக மக்களிடம் கொண்டு செல்வது தவிர்க்கப்பட வேண்டும். ஒரு படம் ஏமாற்றி விட்டதாக இந்தளவுக்கு கொந்தளித்து பேசி வரும் பலர் (பார்வையாளர்கள் உட்பட), நம்மைச் சுற்றி நடக்கும் எத்தனையோ அநீதிகளை, அத்துமீறல்களை, மோசடிகளை கண்டும் காணாமல் கடப்பதையும் நாம் பார்த்து வருகிறோம். ஒரு திரைப்படத்தை மூன்று மணி நேரம் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பார்க்காமல், அது ஏதோ மொத்த சமுதாயத்திற்கும் அநீதி விளைவித்தது போல பலர் பேசி வருவது அநீதியான செயல் என்று கருதுகிறோம்.

விமர்சகர்களுக்கு திரைப்படங்களை விமர்சனம் செய்ய அனைத்து  உரிமையும் உள்ளது. ஆனால் தனிப்பட்ட காழ்புணர்ச்சியின் காரணமாக ஒரு திரைப்படத்தை பற்றிய வெறுப்பை ஊடங்களில் விதைக்க கூடாது என்பதை அனைத்து ஊடகவியலாளர்களும் மனதில் வைத்து திரைப்பட விமர்சனங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இந்த சினிமா துறையால் வாழ்ந்து வரும் ஊடகவியலாளர்கள் இனிமேலாவது தங்களை திருத்தி கொண்டு, சரியான முறையில் விமர்சனங்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
அதே சமயம், திரையரங்குகளுக்கு வெளியே, திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன், பார்வையாளர்களின் கருத்துக்களை பதிவு செய்து வரும் பல YouTube Channel-கள், எல்லை மீறி கருத்துக்களை சொல்லும் பார்வையாளர்களை ஊக்குவித்து, அதை தொடர்ந்து வெளியிட்டு, அதிக அளவில் அத்தகைய கருத்துக்களை, ஏதோ அனைத்து பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உலக அளவில் அதை எடுத்து செல்வது மிகவும் கண்டிக்க தக்கது. சமீபத்தில், “கங்குவா” திரைப்படத்திற்கு விமர்சனம் என்ற பெயரில் ஒரு பெரியவர், ஒரு திரையரங்குக்கு வெளியே தனிமனித தாக்குதல்களும், வன்மத்தை கக்கியதும், அனைவரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அத்தைகைய கருத்துக்களை பதிவு செய்து, மக்களிடம் அதை பெரிய அளவில் கொண்டு சென்ற YouTube Channel-களை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, உணவு நன்றாக இல்லாத பட்சத்தில்,  வெளியே வந்து அந்த ஓட்டல் பற்றி ஊடங்களில் ஏதோ தன் வாழ்க்கையே அதனால் நாசமானது போல யாரவது பேசி இருக்கிறார்களா? அவ்வாறு பேசி இருந்தால், அந்த ஓட்டல் தான் சும்மா விட்டிருப்பார்களா? ஓட்டல் மட்டுமில்லை, எந்த பொருளை வாங்கும் அல்லது உபயோகிக்கும் இடத்தில், அது பிடிக்காத பட்சத்தில், அதை நாகரிகமாக எடுத்து சொல்லி அதற்கான தீர்வை காண்பார்களே தவிர, ஊடங்களில் அது பற்றி மோசமாக பேசி, அந்த ஒட்டலையோ, விற்பனை அங்காடியையோ, Service Centre-யோ எவரும் வசைபாடி, பேசி நாம் பார்த்ததில்லை.
திரையரங்குகளுக்கு வெளியே இவ்வாறு பார்வையாளர்களின் கருத்தை கேட்டு YouTube Channel-களில் பதிவு செய்யும் முறை வந்த பின், பல பார்வையாளர்கள் (Audience) இத்தகைய வீடியோக்கள் மூலம் பிரபலம் அடைய தன்னை திரைத்துறை மேதாவியாக நினைத்து பேசி வருவதும், ஏதோ அத்திரைப்படம், அவரின் மொத்த நிம்மதியையே குலைத்து விட்டது போல பேசி பிரபலம் அடைய முயற்சிக்கிறார்கள். அவ்வாறு அவர்கள் பேசுவது எத்தகைய பாதிப்பை அத்திரைப்படத்திற்கு ஏற்படுத்தும் என்பதை நன்கு உணர்ந்தும் பல YouTube Channel-கள் அவைகளை ஊக்குவித்து வருகின்றன. எந்தவித எடிட்டிங்கும் செய்யமால் அத்தகைய கருத்துக்களை உடனுக்குடன் வெளியிட்டு பிரபலப்படுத்துகின்றன.

சினிமா துறையை ஒட்டுமொத்தமாக அழிக்கும் இந்த செயல்களை உடனே தடுத்து நிறுத்து வேண்டிய கட்டாயம் திரைத்துறையை சார்ந்த அனைவருக்கும் உள்ளது.

தமிழ் நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திரு.திருப்பூர் சுப்ரமணியம் அவர்கள் இன்று அறிவித்தது போல, திரையரங்கு வளாகம் மட்டுமில்ல, அதற்கு அருகிலும், எந்த YouTube Channel-களும் பார்வையாளர்கள்/ரசிகர்களிடம் இனிமேல் புதிய திரைப்படங்களை பற்றி பேட்டி எடுக்க தமிழ் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் அனுமதிக்க கூடாது. Public Review/Public Talk என்கிற பெயரில் பார்வையாளர்களை திரைப்படங்கள் மீதும் அதில் சம்பந்தபட்டவர்கள் மீதும் வன்மத்தை கக்கும் மனிதர்களாக மாற்றும் இந்த போக்கை உடனே தடை செய்யுமாறு அனைத்து திரையரங்க உரிமையாளர்களையும் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கொண்டு, திரைப்படங்களை தார்மீக முறையில் விமர்சிக்காமல், தனிமனித தாக்குதல்கள், வன்மத்தை கக்குத்தல் போன்ற செயல்களை ஊடகங்கள் மூலம் செய்யும் நபர்கள்/ரசிகர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க நமது சங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுக்கவிருக்கிறது என்பதையும் இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறோம். பார்வையாளர்கள்/ரசிகர்கள், தங்களின் இத்தகைய வன்மம் மிகுந்த கருத்துக்கள், எவ்வாறு பெருமளவில் பாதிப்பை திரைத்துறைக்கு ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்து, பொறுப்பான முறையில் விமர்சனங்களை இனிமேலாவது சொல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

இந்த 2024 வருடத்தில் இந்தியன் 2, வேட்டையன் மற்றும் கங்குவா திரைப்படங்களுக்கு Public Review/Talk மூலம் பெருமளவில் பாதிப்பை YouTube Channel-கள் ஏற்படுத்தியுள்ளன. அவைகளை இனிமேல் ஊக்குவிக்காமல், திரைத்துறையை சார்ந்த அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த முறையை தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

அதன் முதல் முயற்சியாக, அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த YouTube Channel-களும் எடுக்க தடை செய்து, இந்த FDFS Public Review/Talk நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img