‘அப்பு பாத்து பாப்பு புரொடக்ஷன் ஹவுஸ்’ மற்றும் ‘ஏடிஎஸ் ஸ்டுடியோஸ்’ சார்பில், தயாரிப்பாளர்கள் எம். ரியாஸ் ஆடம், சிஜோ வடக்கன் ஆகியோர் தயாரித்துள்ள படம் பணி. இப்படத்தை, மலையாள முன்னணி நடிகர் ஜோஜு ஜார்ஜ் முதன் முறையாக இயக்கியிருப்பதுடன், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஜோஜு ஜார்ஜூடன் சாகர் சூர்யா, ஜுனைஸ் வி.பி., பாபி குரியன், அபிநயா, அபயா ஹிரண்மயி, சீமா, சாந்தினி ஸ்ரீதரன், பிரசாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங்கர், ரினோஷ் ஜார்ஜ் , ரஞ்சித் வேலாயுதன், அனூப் கிருஷ்ணன், ஜெயராஜ் வாரியார், பாபு நம்பூதிரி , லங்கா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷ்ணு விஜய், சாம் சி. எஸ் இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவு செய்திருக்கிறார், வேணு, ஜின்டோ ஜார்ஜ்.
கேரள மாநிலம் திருச்சூரில் மிகப்பெரிய முன்னாள் தாதாவான ஜோஜு ஜார்ஜ், தனது நண்பர்களுடன் பல தொழில்களை செய்து, மிகப்பெரும் சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட எல்ல கட்டப் பஞ்சாயத்துகளுக்கும் இவர் தலைமைக்கு மதிப்பு உண்டு. இந்நிலையில், கூலிக்கு கொலை செய்யும் சாகர் சூர்யா மற்றும் ஜுனாயஸ்.வி.பி ஆகிய இருவரும், ஜோஜு ஜார்ஜூவின் மனைவியான அபிநயாவிடம் தவறாக நடந்து கொள்கின்றனர். இதனை தட்டிக்கேட்கிறார், ஜோஜூ ஜார்ஜ். இதற்காக, சாகர் சூர்யா மற்றும் ஜுனாயஸ்.வி.பி இருவரும் பழி வாங்க திட்டமிடுகின்றனர். ஒரு நாள் ஜோஜூ ஜார்ஜுவின் மனைவி அபிநயா தனியாக இருப்பதை நோட்டமிடும் அவர்கள் அபிநயாவை கற்பழிக்கின்றனர். அதன் பிறகு என்ன நடந்தது. என்பது தான் பணி படத்தின் கதை.
ஜோஜு ஜார்ஜ், தனது வழக்கமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்கிறார். அதிரடியில் ஆக்ரோஷம் காட்டும் அவர், மனைவியின் நிலை கண்டு கலங்கி நிற்கும் காட்சியில் கண்களில் வெடித்து நிற்கும் வெறியினை சிறப்பாக வெளிக்காட்டுகிறார். அதிகம் வசனம் இல்லாமல் கண்களிலேயே உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.
ஜோஜு ஜார்ஜூவின் மனைவியாக நடித்திருக்கும் அபிநயா, சிறப்பாக நடித்திருக்கிறார். அழகு, நடிப்பு இரண்டுமே கதாபாத்திரத்தை தாங்கிப்பிடித்திருக்கிறது.
வில்லன்களாக நடித்திருக்கும் சாகர் சூர்யா, ஜுனாயஸ்.வி.பி இருவரும் மிரட்டுகிறார்கள்.
வேணு மற்றும் ஜிண்டோ ஜார்ஜ் ஆகியோரது ஒளிப்பதிவு காட்சிகளை சிறப்பாக படம்பிடித்துள்ளது. சேஸிங் காட்சிகள் சிறப்பு. நடிகர்களது உணர்வுகளை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
விஷ்ணு விஜய், சாம்.சி.எஸ் ஆகியோரது இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை, திரைக்கதைக்கு விறுவிறுப்பினை கொடுத்திருக்கிறது.
வழக்கமான சாதரண ஆக்ஷன் கமர்ஷியல் கதை தான் என்றாலும், அதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சுவாரசியமாக்கியிருக்கிறார், இயக்குநராக அறிமுகமாகும் ஜோஜு ஜார்ஜ். அவர், முதல் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை முழுவதுமாக ஈர்த்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘பணி’ க்ரைம், த்ரில்லர் ரசிகர்களுக்கானது.