விஜய் சேதுபதி. சூரி. ராஜீவ் மேனன். சேத்தன் மற்றும் நட்சத்திர பட்டாளங்களின் அணிவகுப்பில் வெளி வந்திருக்கும் படம் விடுதலை 2. விடுதலை முதல் பாகத்தில் பார்த்த கதையின் தொடர்ச்சியே விடுதலை 2. என்ன சொல்ல வருகிறார் வெற்றிமாறன் ?
விடுதலை படத்தின் முடிவில் வாத்தியார் என்று அழைக்கப்படும் தீவிரவாத அமைப்பின் தலைவர் விஜய் சேதுபதியை கைது செய்தனர். தொடர்ச்சியாக விசாரணை.. விஜய் சேதுபதியை இடம் மாற்றம் செய்வது. அவர் தப்பிப்பது.. முடிவு என்ன சொல்கிறது ? விடுதலை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
முதல் பாகத்தில் ஒரு சாதாரண காவலரின் அடிமைத்தனம், மேலதிகாரியின் ஈகோ, காதல் என நடிகர் சூரியை ஒரு மிகப்பெரிய கதாநாயகன் அந்தஸ்துக்கு கொண்டு சென்றார் வெற்றிமாறன். பாகம் இரண்டில் சூரியின்ன் செயல்பாடுகளை முடக்கி வைத்துவிட்டு விஜய் சேதுபதியின் காதல், கல்யாணம், மோதல், தீவிரவாதம் என அவரை சார்ந்து கதை நகர்கிறது. முடிவு நாயகன் சூரியிடம் ஒப்படைக்கப்படுகிறது.
வாத்தியாராக வரும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இடதுசாரி கொள்கையை கொண்டது. இடதுசாரி என்றால் என்ன ? அதற்கு விளக்கம் தரும் கிஷோர் இவரின் வழிகாட்டுதலின்படி தான் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் வேர் விடுகிறது. ஆதிக்க வர்க்கம், அதிகார வர்க்கம் இருவரும் உழைப்பாளிகளின் வேர்வையை சுரண்ட அதை எதிர்த்து குரல் கொடுத்து மக்களை கிளர்ச்சி செய்ய வைப்பது என விஜய் சேதுபதி இதுவரை அவர் ஏற்றிராத கதாபாத்திரம்.
பாசிச கொள்கைகளை எப்படி நாம் முறியடிப்பது, அதற்குத் தேவை தொழிலாளர்களின் ஒற்றுமை.. அந்த ஒற்றுமையே நம்மை வழிநடத்தி செல்லும் என சொல்லும் இயக்குனரின் கோட்பாடு மிக அருமை. படம் முழுக்க சூரியின் இயலாமையின் வெளிப்பாடு படத்தின் முடிவு.
மஞ்சு வாரியார்.. ஆதிக்க வர்க்கத்தில் பிறந்து இடதுசாரிகளின் கொள்கையை கையிலே எடுத்து அவர்களுக்காக போராடும் வீரப் பெண்மணி. கட்டிய கணவன் தலைமுடியை இழுத்து பிடித்ததுக்காக, அவர் உயிர் நாடியை சிதைத்து ஆண்களைப் போல் சிகை அலங்காரத்தை வைத்துக் கொள்கிறார். இடதுசாரி கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு விஜய் சேதுபதியை மறுமணம் செய்து கொள்கிறார். அந்தத் திருமண ஒப்பந்த உறுதிமொழி படிப்பது தற்கால மணமக்களுக்கு ஒரு பாடம்.
சேத்தன் ஈகோ பிடித்த கதாபாத்திரமாக பாகம் ஒன்றில் நடித்திருந்தாலும் அதைப் பற்றி உண்மை தெரிந்த காவலர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொள்வது ஈகோவின் உச்சம். மற்றும் ராஜீவ் மேனன், கவுதம் மேனன் இவர்கள் இருவரின் நடிப்பு ஏதோ இருக்கிறது. அரசுக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பு, அதனால் ஏற்படும் பிரச்சனைகள், பதில் சொல்ல வேண்டிய கடமைகள், இவை அனைத்தையும் எதார்த்தமாக மிக அருமையாக தங்கள் பங்களிப்பை தப்பாமல் செய்து இருக்கின்றனர்,
இளையராஜாவின் மனசுல பாடல் மனதை வருடி கொடுக்கிறது. காடு, மலை, பள்ளத்தாக்கு என கேமராவின் ஓட்டம் கேமராமேனுக்கே சொந்தம். நிஜங்களின் நிழல்களை படம்பிடித்து காட்டிய வெற்றிமாறனுக்கு நம் வாழ்த்துக்கள்.
விடுதலை 2 – ஒடுக்கப்பட்டவர்களின் ஓலம்.. ஆதிக்கவர்க்கும் அதிகார வர்க்கத்தின் மறுமுகம்..