விலங்குகளை மையப்படுத்தி வெளியாகும் ஹாலிவுட் படங்களுக்கு நம் ரசிகர்களிடம் எப்போதுமே வரவேற்பு உண்டு.. அந்தவகையில் தற்போது சிங்கத்தை கதாநாயகனாக கொண்டு வெளியாகி இருக்கும் படம் தான் முஃபாசா. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போட்டிருக்கிறார்களா.. பார்க்கலாம்.
வறட்சியான வனப்பகுதியில் வாழ்ந்து வரும் சிறுவயது முஃபாசா, தனது பெற்றோருடன் இயற்கை வளம் அதிகம் உள்ள மிலேலே என்ற வனப்பகுதிக்கு பயணிக்கும் போது, திடீரென்று ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, தாய் மற்றும் தந்தையை பிரிந்து விடுகிறார். புதிய இடத்தில் இருக்கும் சிங்க கூட்டத்தின் ராஜா முஃபாசாவை ஏற்க மறுக்க, அந்த ராஜாவின் மகனும், மனைவியும் முஃபாசாவை அரவணைக்கிறார்கள்.
அதன்படி, புதிய இடத்தில் வளரும் முஃபாசா மற்றும் அங்கிருக்கும் சிங்க கூட்டங்களுக்கு, கொலைவெறி சிங்க கூட்டத்தினால் ஆபத்து வருகிறது. ராஜா மற்றும் வளர்ப்பு தாயின் உத்தரவுபடி, இளவரசன் டாக்காவுடன் அந்த இடத்தில் இருந்து தப்பிக்கும் முஃபாசா, தன் பெற்றோர்கள் சொன்ன மிலேலேவுக்கு செல்ல முடிவு செய்கிறார்.
அவரது மிலேலே பயணத்தின் சாகசங்களுடன், கொலைவெறி சிங்க கூட்டங்களை வீழ்த்தி மிலேலேவுக்கு அவர் எப்படி ராஜா ஆனார் என்பதுடன், சகோதரனாக இருந்த டாக்கா எதனால் முஃபாசாவின் எதிரியாக உருவெடுத்தான், என்பதையும் சொல்வது தான் ‘முஃபாசா : தி லயன் கிங்’.
படத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும் ஆற்று வெள்ளம் முதல் இறுதிக் காட்சியில் நடைபெறும் சண்டை வரை கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் அசத்தல். உண்மையான சிங்கம் எது, கிராபிக்ஸ் சிங்கம் எது என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு படத்தின் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் மிரட்டலாக இருக்கிறது.
தமிழ் பதிப்பின் முக்கிய கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருக்கும் நடிகர்கள் நாசர், அசோக் செல்வன், அர்ஜுன் தாஸ், சிங்கம் புலி, ரோபோ சங்கர், விடிவி கணேஷ் ஆகிய அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதிலும், ரஃபிக்கி கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்திருக்கும் விடிவி கணேஷ் “இங்கே என்ன சொல்லுது…” என்ற தனது அடையாள வசனத்தை சரியான இடத்தில் பேசி கைதட்டல் பெற்றுவிடுகிறார்.
அர்ஜுன் தாஸின் கம்பீர குரலோடு வரும் முஃபாசாவின் வீரம் மற்றும் விவேகமும், அசோக் செல்வனின் மென்மையான குரலோடு வரும் டாக்காவின் காதல் மற்றும் துரோகமும், சிறுவர்களுக்கான படம் என்பதை மறக்கடித்து பெரியவர்களையும் ரசிக்க வைக்கிறது.
குழந்தைகள் கொண்டாடும் சிங்க ராஜாவின் கதை என்றாலும், திரைக்கதையில் காதல் மற்றும் துரோகம் இரண்டையும் சேர்த்து பெரியவர்களுக்கான படமாகவும் கொடுத்திருக்கிறார்கள். அதே சமயம், தி லயன் கிங் கதாபாத்திரங்களில் சிறுவர்களை அதிகம் கவர்ந்த மற்றும் சிரிக்க வைக்கும் டிமோன் மற்றும் பும்பா கதாபாத்திரங்களின் திரை இருப்பு இதில் மிக குறைவாகவே இருக்கிறது. ஆனாலும், திரையரங்குகளில் சிரிப்பு சத்தம் தொடர்ந்து கேட்கிறது.