கன்னட திரையுலகில் இயக்குநர், நடிகர் என வெற்றிகரமான இருமுகம் கொண்டவர் நடிகர் உபேந்திரா. அதிரடி கருத்துக்களை சொல்லும் படங்களை இயக்கி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு தமிழில் விஷால் நடித்த சத்யம் என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்திருந்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் தற்போது பத்தாண்டு இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தை இயக்கி, கதையின் நாயகனாக அவர் நடித்திருக்கும் ‘ U1 ‘எனும் திரைப்படம் – அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை காண்போம்.
எதிர்காலத்தில் இருக்கும் கற்பனையான உலகத்தில் சத்யா நல்ல குணங்களைக் கொண்ட ஒழுக்கங்களைக் கொண்ட மனிதராக உருவகப்படுத்தப்படுகிறார். இவர் இந்த உலகத்தில் நேர்நிலையான மாற்றங்களை கொண்டு வருவதில் விருப்பம் கொண்டு, அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். இதற்கு எதிர்மாறாக கல்கி எனும் கதாபாத்திரம் மனித குலத்தில் அறியாமையால் இருக்கும் மக்களை தண்டிக்கிறார். மேலும் ஊழல் செய்யும் அரசியல் தலைவர்களை ஆட்சி செய்யவும் அனுமதிக்கிறார். இந்த தருணத்தில் ஊழல் புரியும் அரசியல்வாதியான வாமன் ராவ் ( கிஷோர்) ‘சென்ட்ரல் சாம்ராட் ‘என்ற நிலைக்கு உயர்த்துவேன் என கல்கி அவரிடம் உறுதியளிக்கிறார். இதற்காக பல வழிகளில் அவருக்கு உதவி செய்கிறார். இறுதியில் சத்யா வெற்றி பெறுகிறாரா? அல்லது கல்கி வெற்றி பெறுகிறாரா? என்பது தான் இப்படத்தின் கதை.
சத்யா – கல்கி என இரண்டு கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்கிறார் உபேந்திரா. குறிப்பாக அவருடைய வின்டேஜ் தோற்றம் ரசிக்க வைக்கிறது.
ரேஷ்மா வழக்கமான கதாநாயகியாகவே திரையில் தோன்றுகிறார். ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடி இருக்கும் சன்னி லியோன் அவரது ரசிகர்களை திருப்தி படுத்துகிறார்.
வாமன் ராவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிஷோர் தன்னுடைய வழக்கமான அனுபவம் மிக்க நடிப்பால் மனதில் இடம் பிடிக்கிறார்.
ஒளிப்பதிவு ,பின்னணி இசை இரண்டும் உபேந்திராவிற்கு பக்க பலமாக இருக்கிறது.
படத்தின் முதல் பாதியில் கடவுள் -மனிதர்கள் -ஊழல் செய்யும் அரசியல்வாதிகள்- வர்க்க முரண்பாடுகள் – ஆகிய மனிதன் இயற்கையுடன் வாழ முடியாத சூழலில் வாழும் சத்யா எனும் மனிதன் கற்பனையான உலகத்தை உருவாக்குவதை காட்சிப்படுத்துகிறது. அதே தருணத்தில் அவருக்கு எதிராக இருக்கும் கல்கி எனும் கதாபாத்திரமும் இடம்பெறுகிறது.
சத்யாவாகவும், கல்கியாகவும் உபேந்திரா நடித்திருக்கிறார். இதனை பார்வையாளர்களுக்கு தெளிவாக விளக்குவதற்காக வெண்மை நிற உடை மற்றும் கருப்பு வண்ண உடையை அணிந்து திரையில் தோன்றுகிறார். இருப்பினும் காட்சிகள்- எதிர்காலம், நிகழ்காலம் ,சத்யா ,கல்கி, உருவகம் ,நடைமுறை என முன்னுக்குப் பின் முரணாக நகர்வதால் காட்சிகளை புரிந்து கொள்வதில் பார்வையாளர்களுக்கு தடுமாற்றமும், குழப்பமும் ஏற்படுகிறது..
பல இடங்களில் பிரச்சார நெடி அளவைவிட அதிகமாக துக்கலாக தெரிகிறது. இருப்பினும் உச்சகட்ட காட்சியில் ரசிகர்களை திருப்திப்படுத்துகிறார். உபேந்திராவின் திரைப்படங்களில் இடம்பெறும் அரசியல் நையாண்டி உரையாடல்கள் இந்தத் திரைப்படத்தில் சற்று வீரியம் குறைவாகவே காணப்படுகிறது. கிராஃபிக்ஸ் காட்சிகளிலும் , வி எஃப் எக்ஸ் காட்சிகள் பாராட்டுக்குரியவை.