தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தின் எல்லை பகுதியை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களில் கதையின் நாயகனும் ஒருவர். இவர் ஒரு முறை செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் நாயின் உயிரை காப்பாற்றுகிறார். அந்த நாய் நன்றியுடன் இவரை வீடு வரை பின் தொடர்கிறது.
அதற்கு நாயகன் காளி என பெயரிட்டு வளர்த்து வருகிறார். இந்த தருணத்தில் இவர் பொருளாதார சிக்கலுக்கு ஆளாகி இருக்கும் தன் குடும்பத்தை மீட்பதற்காக கேரள மாநிலத்திற்கு புலம் பெயர்ந்து வேலை செய்கிறார். அங்கு அவர் பாசத்தோடு வளர்த்து வரும் காளி எனும் நாய்க்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.
அந்த பிரச்சனையிலிருந்து நாயை காப்பாற்ற முயற்சிக்கிறார். அதனால் அவருக்கு என்ன நடந்தது? நாயை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதுதான் ‘அலங்கு’ படத்தின் கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் குணாநிதி- ‘செல்ஃபி ‘ படத்திற்குப் பிறகு நடிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். குறிப்பாக எக்சன் காட்சிகளில் அதிரடி காட்டுகிறார். இவர் நாய் மீது காட்டும் பாசமும், அதற்கான பரிவும் அப்பட்டமான சினிமாத்தனமாக இருக்கிறது. இதற்காக அமைக்கப்பட்ட காட்சிகளிலும் அழுத்தம் இல்லை. கதை அடர்ந்த வனத்தில் பயணிப்பதால் யானை, பாம்பு, குரங்கு போன்றவற்றை திரைக்கதையில் இடம்பெற வைத்திருப்பதும் பலவீனம்.
உண்மை சம்பவங்களை தழுவி கதை உருவாக்கப்பட்டு அதனை யதார்த்தமாக சொல்ல முயற்சி செய்து.. அதில் எந்த இடத்திலும் பார்வையாளர்கள் எதிர்பார்க்காத சிறிய அளவிலான சுவாரசியமான திருப்பங்களும் இடம் பெறாததால் ரசிகர்களுக்கு சோர்வு ஏற்படுகிறது.
எஸ். பாண்டி குமாரின் ஒளிப்பதிவும், அஜீஷின் பின்னணியிசையும் குறைந்தபட்ச தரத்தில் இருக்கிறது.
அனைத்து உயிர்களும் ஒன்று தான் என படக்குழுவினர் சொல்ல நினைத்திருக்கும் கருத்திற்கு வரவேற்பு தெரிவித்தாலும் செல்லப்பிராணியான நாய் மட்டும் இன்றி யானை, நரிக்கூட்டம் என்று வன விலங்குகளையும் காட்சிகளில் பயன்படுத்தி சிறுவர்களையும் கவர முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சக்திவேல்