நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான ‘வல்லவனுக்கு வல்லவன்’ எனும் திரைப்படத்தை இயக்கிய விஜய் தேசிங்கு ( விஜய வாணன்) – விஜய் கார்த்திகேயா என பெயரை மாற்றிக் கொண்டு இயக்கி இருக்கும் அதிரடி மாஸ் எக்சன் எண்டர்டெய்னர் திரைப்படம் தான் ‘மேக்ஸ்’. ‘விக்ராந்த் ரோனா ‘ எனும் திரைப்படத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான கிச்சா சுதீபா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
காவல் நிலையம் ஒன்றிற்கு இரண்டு மாத பணியிடை நீக்கத்திற்கு பிறகு மீண்டும் காவல் ஆய்வாளராக பொறுப்பேற்கிறார் மேக்ஸ் என குறிப்பிடப்படும் அர்ஜுன் மகாக்ஷய் ( கிச்சா சுதீபா) . அவர் பொறுப்பேற்பதற்கு முதல் நாள் இரவு பெண்களிடம் பொதுவெளியில் பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை கைது செய்து விசாரணை கைதியாக அவர் பணியாற்ற உள்ள காவல் நிலையத்தில் அடைத்து வைக்கிறார்.
அங்கு எதிர்பாராத தருணத்தில் விசாரணை கைதியாக பிடித்து வைத்திருக்கும் இரண்டு இளைஞர்களும் காவல் நிலையத்தின் ஆயுத அறையில் மர்மமான முறையில் இறந்து விடுகிறார்கள். அவர்கள் மாநில அரசில் அதிகாரத்தில் இருக்கும் அமைச்சர்களின் வாரிசு என்பதால் அங்கு பணியாற்றும் காவலர்கள் பதற்றம் அடைகிறார்கள்.
நிலைமையை உணர்ந்து கொள்ளும் காவல் ஆய்வாளரான மேக்ஸ் , தன்னுடன் பணியாற்றும் காவலர்களை எப்படி பாதுகாக்கிறார்? அந்த காவல் நிலையத்தின் ஆயுத அறையில் நடைபெற்ற மர்ம மரணத்தின் பின்னணி என்ன? அமைச்சர்களின் வாரிசுகள் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற செய்தியை கேள்விப்படும் அதிகார வர்க்கம் காவல் நிலையத்தை முற்றுகை இடுகிறது. அதிலிருந்து காவல் நிலையத்தை எப்படி பாதுகாக்கிறார்? இறுதியில் என்ன நடைபெற்றது? என்பதை பரபரப்பான எக்சன் திரில்லராக விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
தொடக்கம் முதலே வேகம் எடுக்கும் திரைக்கதை எதிர்பாராத சுவாரசியமான சின்ன சின்ன திருப்பங்களால் ரசிகர்களை பதட்டப்பட வைக்கிறது. எக்சன் காட்சிகளும் ரசிகர்களை கண்களை அகல விரித்து ஆச்சரியத்துடன் காண வைக்கிறது. அதிலும் இடைவேளைக்கு முன் வரும் பத்து நிமிட பரபரப்பான எக்சன் காட்சிகள் ரசிகர்களை நிச்சயம் இருக்கையின் நுனிக்கு வரவழைத்து விடுகிறது.
இரண்டாம் பாதியில் தொடக்கத்தில் இருந்து உச்சகட்ட காட்சிக்கு முன்பு வரை படத்தின் வேகம் குறையாமல் எதிர்பாராத முடிச்சுகளை வழங்கிக் கொண்டே பயணிக்கிறது. காவல் நிலையத்தின் ஆயுத அறையில் நடைபெற்ற மரணத்தின் பின்னணி பார்வையாளர்களுக்கு தெரிய வரும்போது வழக்கமான மசாலா படத்திற்கு திரும்புகிறது.
மேக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிச்சா சுதீபா ரசிகர்களின் குறிப்பாக எக்சன் பிரியர்களின் நாயகனாக திரையில் தோன்றி திரை முழுவதும் ஆக்கிரமித்து அதகளம் செய்கிறார். காவல் அதிகாரியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமாரும் திரைக்கதையின் விறுவிறுப்புக்கு பங்களிப்பு செய்கிறார். காவலராக நடித்திருக்கும் இளவரசு திரைக்கதையின் சுவாரசியமான திருப்பத்திற்கு உதவுவதுடன் நன்றாக நடித்து ரசிகர்களை கவர்கிறார். பெண் காவலர்கள் ஆர்த்தி மற்றும் மீனாவாக நடித்திருக்கும் நடிகைகளும் இயக்குநர் சொன்னதை உள்வாங்கி நடித்திருக்கிறார்கள். வில்லனாக நடித்திருக்கும் வம்சி கிருஷ்ணா- வழக்கம் போல் வில்லத்தனமான நடிப்பை வழங்கி தன் இருப்பை உறுதி செய்து கொள்கிறார்.
படத்திற்கு ஒளிப்பதிவாளர் சேகர் சந்திராவின் பங்களிப்பும், இசையமைப்பாளர் பி. அஜனீஸ் லோக்நாத்தின் பாடல்கள் மற்றும் பின்னணியிசையும் பக்க பலமாக இருக்கிறது. படத்தொகுப்பாளர் எஸ். ஆர் கணேஷ் பாபு- பரபர எக்சன் திரில்லருக்குரிய காட்சிகளை கச்சிதமாக தொகுத்து உச்சகட்ட காட்சி வரை ரசிகர்களை பதட்டத்திலேயே வைத்திருக்கிறார். இதற்காக இவரையும் பாராட்டலாம்.
லாஜிக் மீறலை பற்றி கவலைப்படாமல் பரபரப்பான எக்சன் திரில்லர் திரைப்படத்தை பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு ‘மேக்ஸ்’ ஒரு மேக்சிமமான என்டர்டெய்னர் படம்.