சிவ கார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’, கார்த்தி நடித்த ‘தம்பி’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த மலையாள நடிகரான அன்சன் பால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம்’ மழையில் நனைகிறேன்’. காதல் திரைப்படமான இந்த திரைப்படம் காதலிப்பவர்களையும் காதலிக்க நினைப்பவர்களையும் மகிழ்ச்சி அடைய செய்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
வாழ்க்கையில் எந்த லட்சியமும் இல்லாத இளைஞனாக ஊதாரியாக இருக்கும் ஜீவா செபாஸ்டியன் ( அன்சன் பால்) எனும் கதையின் நாயகன்- அமெரிக்காவிற்கு சென்று உயர்கல்வியை கற்று, அங்கேயே வேலையைத் தேடிக் கொண்டு, வாழ்க்கையை சொகுசாக வாழ வேண்டும் என லட்சிய வேட்கையுடன் இருக்கும் ஐஸ்வர்யா ( ரெபா மோனிகா ஜான்) எனும் இளம்பெண்ணை சந்திக்கிறார். சந்தித்த தருணத்திலேயே காதலிக்கவும் தொடங்குகிறார். நாயகனின் காதல் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை.
வழக்கமான அரதபழசான காதல் கதை. மேத்யூ வர்கீஸ் , அனுபமா குமார் தம்பதிகளின் ஒரே மகன் ஜீவா. கடற்கரையில் அமர்ந்து இயற்கையை ரசித்துக் கொண்டிருக்கும் போது மழை குறுக்கிட, அங்கிருந்து அருகே இருக்கும் மரத்தில் ஒதுங்குகிறார்.
அதே தருணத்தில் ‘சங்கர் குரு’ ராஜா – சுஜாதா தம்பதியினரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் கடற்கரை அருகே இருக்கும் அதே மரத்தில் ஒதுங்குகிறார். தன் அருகே நின்று மழையை ரசிக்கும் ஐஸ்வர்யாவை ஆசை தீர பார்த்ததுடன் காதலிக்கவும் தொடங்குகிறார் ஜீவா.
காதலை காதலியிடம் சொல்ல காதலன் வழக்கம் போல் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஜீவாவும் மேற்கொள்கிறார். பிறகு ஒரு புள்ளியில் காதலை சொல்ல, அவள் காதலை ஏற்க மறுக்கிறார். அதன் பிறகும் ஐஸ்வர்யாவை ஜீவா பின் தொடர்கிறார்.
பிறகு ஐஸ்வர்யா, ஜீவாவை பற்றி தன் தங்கை மூலம் தெரிந்து கொள்கிறார். அதன் பிறகு ஜீவாவிடம் நட்பாக பழகத் தொடங்குகிறார் ஐஸ்வர்யா. இவர்கள் ஒரு முறை பயணிக்கும் போது எதிர்பாராமல் விபத்து நடைபெறுகிறது. அந்த விபத்தில் இருவருக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. இவர்கள் இருவரும் இல்வாழ்க்கையில் இணைந்தார்களா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் திரைக்கதை.
படத்தின் முதல் பாதி வழக்கமான காட்சிகளும், பார்வையாளர்கள் எளிதில் யூகிக்கும் காட்சிகளும் அடுத்தடுத்து வருவதால் எந்தவித சுவாரசியமும் இல்லாமல் பயணிக்கிறது. இதனால் சோர்வும், உறக்கமும் ஏற்படுகிறது.
இரண்டாம் பாதியில் நாயகன்- நாயகி ஆகிய இருவரும் அவர்களது பெற்றோர்களால் கைவிடப்பட தங்களது வாழ்க்கையை யாருடைய துணையின்றி தனியாக தொடங்குகிறார்கள். கஷ்டப்பட்டு உழைத்து வாழ்க்கையில் முன்னேறும் போது ஐஸ்வர்யாவிற்கு அவருடைய பெற்றோர்களிடமிருந்து அழைப்பு வருகிறது. திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் கழித்து பெற்றவர்களை சந்திப்பதற்காக மகிழ்ச்சியுடன் துவி சக்கர வாகனத்தில் செல்கிறார்கள். எதிர்பாராமல் மீண்டும் விபத்து ஏற்படுகிறது.
இதற்குப் பிறகுதான் பார்வையாளர்களுக்கு ஒரு விடயம் புரிகிறது. அதாவது விபத்து ஏற்பட்டு கோமாவில் இருக்கும் நாயகியின் கனவில் தோன்றும் நிகழ்வுகள் தான் காட்சிகளாக விரிகிறது என்று. ஆனால் நிஜத்தில் என்ன நடந்தது? என்பதுதான் முத்தாய்ப்பான உச்ச கட்ட காட்சி.
இதில் புதுமை என்று சொல்வதற்கு பூதக்கண்ணாடிய கொண்டு தேடிய பிறகு இரண்டு விடயங்களை சொல்லலாம். தற்போதுள்ள சூழலில் பதிவு திருமணம் செய்து கொள்வது என்பது கடினம் என்பதும், கோமாவில் இருக்கும் நாயகியின் கனவுகள் காட்சிகளாக விரிவது என்பதும் தான் அது.
இதுபோன்ற காதல் திரைப்படங்களில் பாடல்களும், இசையும் பலமாக இருக்க வேண்டும். ஆனால் இந்த படத்தில் அதுவும் மைனஸ். காதலர்களாக திரையில் தோன்றும் நட்சத்திரங்கள் இளமை துடிப்புடனும், அழகாகவும் இருக்க வேண்டும். அதுவும் இங்கு மைனஸ். குறிப்பாக நாயகி ரெபா மோனிகா ஜானின் முகத்தில் இளமை மிஸ்ஸிங். ஒளிப்பதிவும் கண்களுக்கு குளிர்ச்சியாக இல்லாமல் இயல்பாக இருப்பதால் பல காட்சிகளை ரசிக்கவே முடியவில்லை.
உரையாடல்களை பொறுத்தவரை இரண்டாம் பகுதியில் நாயகனுக்கு வாழ்வாதாரத்தை வழங்கும் ஒரு கதாபாத்திரம் ‘ஆயிரம் ஆடி கார் வாங்குற உனக்கு இந்த ஐயங்கார புடிச்சிருக்கு’ எனும் ஒன் லைன் பஞ்ச் புன்னகைக்க வைக்கிறது.
நாயகனாக நடித்திருக்கும் அன்சன் பால் நாயகியாக நடித்திருக்கும் ரெபா மோனிகா ஜான் இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை திரையில் செய்திருக்கிறார்கள். இவர்களுக்கு இடையேயான காதல் காட்சிகளில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் கெமிஸ்ட்ரி மிஸ்ஸிங்.