spot_img
HomeCinema Reviewதி ஸ்மைல் மேன் - விமர்சனம்

தி ஸ்மைல் மேன் – விமர்சனம்

வைத்தியசாலையிலுள்ள பிணவறையில் பிணகூறாய்வு செய்யும் ஊழியராக பணியாற்றும் பிரபு ( கலையரசன்) மீது அன்பு செலுத்தவோ.. அன்பை பகிர்ந்து கொள்ளவோ.. யாரும் இல்லை. அத்துடன் அவருடைய தொழில் காரணமாக மற்றவர்களாலும், உடன் பணியாற்றுபவர்களாலும் புறக்கணிக்கப்படுகிறார். இதை நினைத்து கடும் வேதனையிலும், மன அழுத்தத்திலும் இருக்கும் போது.. அந்த வைத்தியசாலையில் தாதியராக பணியில் சேரும் சித்ரா எனும் பெண்மணி அவரை நேசிக்கிறார். அன்பு காட்டுகிறார்.

இதனால் உற்சாகமடையும் பிரபு.. அவரை சந்தித்து திருமணம் செய்து கொள்ளலாமா?  என கேட்கிறார். அதற்கு சித்ரா என் மகள் ( பேபி ஆழியா) சம்மதித்தால் திருமணம் செய்து கொள்கிறேன் என்கிறார். பிரபு சித்ராவின் மகளிடம் சென்று அவரின் சம்மதத்தை கேட்க.. அவர் எமக்கு சிதம்பரம் நெடுமாறனின் ( சரத்குமார் ) அன்பும், அரவணைப்பும் பிடித்திருக்கிறது. அவரைத்தான் எனது தாயார் திருமணம் செய்து கொள்வார் என சொல்கிறாள்.

இதனால் பிரபு காவல்துறை உயரதிகாரியான சிதம்பரம் நெடுமாறன் மீது கோபம் கொள்கிறார். அவரை பழிவாங்கவும் திட்டமிடுகிறார்.  இந்தத் தருணத்தில் சிதம்பரம் நெடுமாறனும், வெங்கடேஷ் ( சுரேஷ் மேனன்) என்பவரும் காவல்துறையில் நண்பர்களாகவும், அதிகாரிகளாகவும் பணியாற்றுகிறார்கள். இந்தத் தருணத்தில் மாநகரில் தொடர் கொலைகள் நடைபெறுகிறது.

இதன் பின்னணியில் இருப்பது யார்?  என இந்த இரண்டு அதிகாரிகளும் விசாரிக்கிறார்கள். இறுதியில் காவல் துறை அதிகாரியான வெங்கடேஷ் அந்த கொலைகாரனை துப்பாக்கியால் சுட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வை வழங்குகிறார். இதே தருணத்தில் விபத்து ஒன்றில் சிக்கும் சிதம்பரம் நெடுமாறன் – அல்சைமர் எனப்படும் நினைவு திறன் இழப்பு பாதிப்பிற்கு ஆளாகிறார்.

ஐந்தாண்டுகளாக சிகிச்சை பெறும் சிதம்பரம் நெடுமாறன் அதன் பிறகு தன் அனுபவத்தை நூலாக எழுதி வெளியிடுகிறார். இந்த நூல் வெளியான பிறகு மீண்டும் அதே போல் தொடர் கொலைகள் நடைபெறுகிறது. இந்தத் தருணத்தில் அந்த தொடர் கொலைகளை செய்யும் கொலையாளி யார்? என்பதை புதிய இளம் அதிகாரிகளின் துணையுடன் சிதம்பரம் நெடுமாறனும் இணைந்து தேடுகிறார்கள். கொலையாளி யார்? அவர் கிடைத்தாரா? இல்லையா? இதன் நிஜ பின்னணி என்ன ? என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை.

படத்தின் முதல் பாதி கதை ரசிகர்களுக்கு பரப்பரப்பை ஏற்படுத்துகிறது. இரண்டாம் பாதியில் கொலையாளி யார் ? என்று தெரியும் வரை சுவராசியமாக செல்லும் திரைக்கதை.. அதன் பிறகு வழக்கமான பாணிக்கு திரும்புகிறது.

படத்தின் முதல் பாதி காட்சிகளும், பின்னனியிசையும், எதிர்பாராத திருப்பங்களும் ரசிகர்களை ஓரளவிற்கு திருப்தி படுத்துகிறது. அதே தருணத்தில் இந்தத் திரைப்படம் கொரியன் திரைப்படத்தின் அப்பட்டமான கொப்பி என்று ஒரு பிரிவினரும், பிரஞ்சு திரைப்படத்தின் அப்பட்டமான கொப்பி என்று மற்றொரு பிரிவினரும் தெரிவித்தனர். இருப்பினும் தமிழ் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் படத்தின் முதல் பகுதி உருவாகி இருக்கிறது. இரண்டாம் பகுதி வழக்கமான பாணியில் அதாவது பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் காட்சிகளுடன் கதை நகருகிறது. இதனால் சோர்வும், அயர்ச்சியும் ஏற்படுகிறது.

150ஆவது படம் என்பதால் சரத்குமார் தன்னுடைய அனுபவமிக்க நடிப்பால் அந்த கதாபாத்திரத்தை ரசிகர்களின் மனதில் எளிதாக கடத்துகிறார். ஆனால் தமிழக காவல் துறையின் புலனாய்வு பிரிவில் இப்படி உளவியல் ரீதியாக பலவீனமானவர்களை காவல்துறை அதிகாரியாக பணியாற்ற அனுமதிப்பார்களா ..? என்பது சந்தேகம்தான்.  இருந்தாலும் சரத்குமார் தன் நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்கிறார். இவரைத் தொடர்ந்து இளம் அதிகாரியாக நடித்திருக்கும் ஸ்ரீகுமார் ரசிகர்களின் கவனத்தை கவருகிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகை சிஜா ரோஸ் மற்றும் இனியாவின் கதாபாத்திரம் எந்த அதிர்வையும் ஏற்படுத்தாமல் இயல்பாக கடந்து செல்கிறது. இந்த கலைஞர்களின் திறமையை படக் குழு பயன்படுத்தவில்லை.

விக்ரம் மோகனின் ஒளிப்பதிவும், கவாஸ்கர் அவினாசின் பின்னணி இசையும் படத்தை ஓரளவு ரசிக்க வைக்கிறது.

திரைக்கதையில் சில லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும், தொழில்நுட்ப கலைஞர்களின் பணி, முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்களின் திரை இருப்பு மற்றும் மேக்கிங் ஆகியவை படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது.

மொத்தத்தில், ‘ஸ்மைல் மேன்’ பயம் காட்டவில்லை என்றாலும், ஒரு முறை பார்க்கலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img