தமிழகம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலத்தின் எல்லையோர பகுதியில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில் சிறிய அளவில் லாட்டரி கடை ஒன்றினை நடத்துகிறார் மாணிக்கம் ( சமுத்திரக்கனி) எனும் குறு வணிகர். இவருக்கு அழகான மனைவி( அனன்யா ) இரண்டு பெண் பிள்ளைகள் ,மாமியார், மச்சான் ,என குடும்ப உறுப்பினர்களும் இருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் நாளாந்த வாழ்வாதாரத்திற்காக கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் கடன் சுமையால் தவிக்கிறார்கள். இந்த தருணத்தில் மாணிக்கம் விற்பனை செய்யும் லாட்டரி நிலையத்திற்கு முதியவர் ஒருவர் வருகிறார்.
அவர் மூன்று லாட்டரிகளை தெரிவு செய்து வாங்குகிறார். ஆனால் அதற்குரிய தொகையை செலுத்த தவறுகிறார். தான் லாட்டரி வாங்குவதற்காக வைத்திருந்த தொகை தவறிவிட்டது.
இந்த லாட்டரிகளை எடுத்து வைக்கவும். நாளை அல்லது அதன் பிறகு தொகையை செலுத்தி விட்டு வாங்கிக் கொள்கிறேன் என்கிறார். அந்த பெரியவர் வாங்க நினைத்த லாட்டரிக்கு இந்திய மதிப்பில் ஒன்றரை கோடி ரூபாய் பரிசு கிடைக்கிறது.
வாழ்க்கையில் நேர்மையை உறுதியாக கடைப்பிடிக்கும் மாணிக்கம் அந்த லொத்தரை வாங்க நினைத்து அதற்குரிய கட்டணம் செலுத்தாத முதியவரிடம் ஒப்படைத்தாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.
இயல்பான மனிதர்கள் நேர்மையாக செயல்படும்போது அதற்கு கௌரவமும், மரியாதையும் கிடைக்கும் போது அதனை ஏற்றுக் கொள்வார்கள்.
ஆனால் நேர்மையாக வாழ வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழும் கதையின் நாயகன் , நேர்மைக்காக கௌரவமும், மரியாதையும் கிடைக்கும் போது அதுவும் அரசாங்கத்தால் கிடைக்கும் போது அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து இயல்பாக வாழ்வது போல் அந்த கதாபாத்திரம் எழுதப்பட்டிருப்பது தனித்துவமான கவனத்தை ஈர்க்கிறது.
மாணிக்கம் எனும் கதாபாத்திரத்தை இயக்குநர் நந்தா பெரியசாமி அழகாக எழுதி இருக்கிறார். அதே தருணத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் அனன்யாவின் கதாபாத்திரத்தையும் இயக்குநர் அழுத்தமாக எழுதி இருக்கிறார்.
இந்த கதாபாத்திர முரண் ரசிக்க வைத்தாலும் இதற்காக வடிவமைத்த திரைக்கதை விறுவிறுப்பாக இருந்தாலும் உச்சகட்ட காட்சியை ரசிகர்கள் எளிதாக யூகித்து விடுவதால் ஏற்படுத்த வேண்டிய தாக்கம் குறைவாகத்தான் இருக்கிறது. அதே தருணத்தில் நடிகர் வெற்றி நடிப்பில் வெளியான ‘பம்பர்’ எனும் திரைப்படத்தின் கதைகளும், காட்சிகளும் நினைவுக்கு வருவதையும் தவிர்க்க முடியவில்லை.
மாணிக்கமாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி தன் அனுபவம் மிக்க நடிப்பை வழங்கி அந்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்டுகிறார். கதையின் மையப் புள்ளியான பாரதிராஜா வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறார். அனன்யா உள்ளிட்ட கதாபாத்திரங்கள் கிடைக்கும் சந்தர்ப்பங்களை தங்களுடைய சுயநலத்திற்காக பாவிக்க வேண்டும் என்ற இன்றைய வணிகமயமாகிவிட்ட மனிதர்களை காட்சிப்படுத்துகிறது.
எம். சுகுமாரின் ஒளிப்பதிவும், விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.