விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர்.கே.செந்தில் வேலன் தயாரித்து கதை எழுதியிருக்கும் படம் ‘சீசா’. அறிமுக இயக்குந்=அர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் நட்டி நட்ராஜ் கதையின் நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக நிஷாந்த் ரூசோ நடித்திருக்கிறார். நாயகியாக பாடினி குமார் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆதேஷ் பாலா, மூர்த்தி, மாஸ்டர் ராஜநாயகம், தயாரிப்பாளர் டாக்டர்.செந்தில் வேலன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஜனவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் சிறப்பு திறையிடல் நிகழ்வு வெளியீட்டு முன்னதாக ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற்றது. இதில், பங்கேற்று படம் பார்த்த பத்திரிகையாளர்கள் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். குறிப்பாக, “படத்தில் நல்ல கருத்து சொல்லப்பட்டிருப்பதோடு, மேக்கிங்கும் சிறப்பாக உள்ளது” என்று அனைத்து பத்திரிகையாளர்களும் இயக்குநரை பாராட்டினார்கள்.
பத்திரிகையாளர்களிடம் படம் குறித்து பேசிய இயக்குநர் குணா சுப்பிரமணியம், “நான் இந்த இடத்தில் நிற்பதற்கு டாக்டர்.கே.செந்தில் வேலன் சார் தான் காரணம். என் உடல் நிலை மற்றும் மனநிலையை சரியாக்கி, எனக்கு வாய்ப்பும் கொடுத்த அவருக்கு என்றும் நன்றிக்கடன் பற்றியிருக்கிறேன். நான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றவில்லை, அப்படி இருந்தும் நான் சொன்ன கதை மீது நம்பிக்கை வைத்து நடிக்க வந்த நட்டி சாருக்கும் நன்றி.
படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் பாராட்டியது மகிழ்ச்சியளிக்கிறது. வெறும் பொழுதுபோக்கிற்கான படமாக அல்லாமல் மக்களுக்கு நல்ல விசயத்தை சொல்லும் ஒரு படமாக இருக்க வேண்டும், என்று முடிவு செய்து தான் இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கிறோம். இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். படத்தில் ஆன்மீகம் தொடர்பான சில காட்சிகள் வைக்கப்பட்டிருப்பது குறித்து என்னிடம் கேட்டீர்கள், நான் ஆமீகத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டவன், அதனால் தான் படத்தில் அப்படிப்பட்ட காட்சிகள் வைத்தேன்.” என்றார்.
நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில், “இவ்வளவு நேரம் ஒதுக்கி எங்கள் படத்தை பார்த்ததற்கு நன்றி. நான் தொடர்ந்து போலீஸ் வேடத்தில் நடிப்பதாக சொல்கிறீர்கள். ஆனால், ஒவ்வொரு வேடத்திலும் வித்தியாசமாக எதாவது இருப்பதால் தான் நடிக்கிறேன். இன்னும் மூன்று படங்களில் போலீஸாக தான் நடித்திருக்கிறேன். அதேபோல் மீண்டும் ஒளிப்பதிவு செய்வது எப்போது? என்று கேட்கிறீர்கள், நிச்சயம் 2025 ஆம் ஆண்டு பெரிய படத்தில் என்னை ஒளிப்பதிவாளராக பார்க்கலாம்.” என்றார்.
நடிகரி நிஷாந்த் ரூசோ பேசுகையில், “எனது ’பன்றிக்கு நன்றி சொல்லி’, ‘பருந்தாகுது ஊர் குருவி’ ஆகிய படங்களு எப்படி ஒத்துழைப்பு கொடுத்தீர்களோ அதுபோல் ‘சீசா’ படத்திற்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நிச்சயம் படம் மக்களுக்கு பிடிக்கும், நன்றி.” என்றார்.
நடிகர் மூர்த்தி பேசுகையில், “எனக்கு இந்த வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. ஆடிசன் மூலமாகத்தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இவ்வளவு பெரிய படத்தில், எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பளித்த இயக்குநர், என்னுடன் இணைந்து நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.
நடிகர் மாஸ்டர் ராஜநாயகம் பேசுகையில், “’சீசா’ விழிப்புணர்வு படமாக உருவாகியிருக்கிறது. தற்போது நாட்டில் நடக்கும் மிகப்பெரிய பிரச்சனையின் பின்னணியில் ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார்கள். இந்த படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும், பத்திரிகையாளர்கள் அனைவரும் படத்தை பாராட்டியிருப்பதால் படம் மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.
கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் பேசுகையில், “எனக்கு இப்படி ஒரு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. நட்டி சாருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது, நன்றி.” என்றார்.
கதாநாயகி பாடினி குமார் பேசுகையில், “எங்கள் படத்தை பார்க்க நேரம் ஒதுக்கிய அனைவருக்கும் நன்றி. படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. ஜனவரி 3 ஆம் தேதி வெளியாகிறது, அனைவரும் திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டும், நன்றி.” என்றார்.
நடிகர், பத்திரிகையாளர், திரைப்பட விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் பேசுகையில், “இந்த படத்தின் இயக்குநர் ஏழு வருடங்களுக்கு முன்பு என்னை வைத்து ஒரு விளம்பர படம் எடுத்தார், அப்போது அவர் இப்படி ஒரு படம் எடுப்பார் என்று நான் நினைக்கவில்லை. மிக சிறப்பான படம், சமூகத்தில் இளைஞர்களை சீரழிக்கும் விசயங்களில் மிக முக்கியமான விசயத்தை வைத்துக்கொண்டு சிறப்பான கிரைம் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார். படத்தின் முதல் பாதியில் நானே மிரண்டு விட்டேன், அந்த அளவுக்கு சஸ்பென்ஸ் இருக்கிறது. தம்பி நிஷாந்த் ரூரோவின் நடிப்பு மிரட்டி விட்டது, அவர் நிஜமாகவே மனநலம் பாதிக்கப்பட்டவரோ என்று கூட நினைத்தேன், அந்த அளவுக்கு நடித்திருக்கிறார். கோடி கணக்கில் சம்பளம் கொடுக்க காத்திருந்தாலும் அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் நட்டி சிறப்பாக நடித்திருக்கிறார், அவருக்கு என் வாழ்த்துகள்.
மக்களுக்கு தேவையான ஒரு கருத்தை இயக்குநர் சிறப்பாக சொல்லியிருக்கிறார், அவருக்கு வாய்ப்பளித்த டாக்டர்.செந்தில் வேலனுக்கு நன்றி. நிச்சயம் இந்த படம் கமர்ஷியலாகவும் வெற்றி பெறும், அந்த அளவுக்கு படத்தில் விசயம் இருக்கிறது, நன்றி.” என்றார்.
’சீசா’ இரண்டாம் பாகம் எடுப்பீர்களா? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் குணா சுப்பிரமணியன், “நிச்சயம் நீங்களும், மக்களும் ஆதரவு கொடுத்தால் எடுப்பேன். அதற்கான வாய்ப்பும் திரைக்கதையில் இருக்கிறது. கொலை, குற்றவாளியை கண்டுபிடிக்கும் காவல்துறை சடலத்தை கண்டுபிடிக்கவில்லையே ஏன்? என்ற கேள்வி எழலாம், நிச்சயம் அதை வைத்து அடுத்த பாகத்தை எடுக்க நான் தயாராக இருக்கிறேன்.” என்றார்.
சரண் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பெருமாள் மற்றும் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். வில்சி ஜெ.சசி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.